ஆந்திரா: சாலை இல்லாததால் கர்ப்பிணியை 12 கி.மீ. தூக்கி சென்ற கணவர்

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களுக்கு சாலை வசதிகள் இன்னும் முழுமையாக செய்து கொடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. இதற்காக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் கிராமத்து மக்கள் உதவியுடன் அந்த பெண்ணின் கணவர் அவரை 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டே நடந்து சென்றார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் பரவி பெரும் கண்டனத்திற்கு ஆளானது. இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது குறித்து ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.