அமராவதி: கொரோனாவால் தாய், தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவி்த்துள்ளார். இந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் மாதாந்திர வட்டி மூலம் குழந்தையின் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு குழந்தையை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நாட்டில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா 2-வது அலையால் குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுள்ளது, அதிகமான பாதிப்பை குழந்தைகள்தான் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரசால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும். கொரோனாவால் ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.