அமராவதி:

ந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் சட்டமன்ற மேலவை ஒழிப்பதற்கான தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக சட்டமன்ற மேலவையை ஒழிப்பதற்கான தீர்மானத்துக்கு  ஆந்திர மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அமைந்தது முதல், முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டும் மாற்றி அமைக்கப்பட்டும் வருகின்றன. அதுபோல மாநில தலைநகர் அமராவதிக்கு பதிலாக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

3தலைநகரங்கள் அமைக்கும் மாநில அரசின் முடிவுக்கு அமைச்சரவையையும் ஒப்புதல் வாங்கியது. இதையடுத்து, அதற்கான தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றும் விதமாக  ஆந்திர மாநில சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில்,  3 புதிய தலைநகரங்கள் உருவாக்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது.  ஆனால், இந்த தீர்மானத்துக்கு சட்டமன்ற மேலவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சட்டமன்ற மேலவையையே ஒழிக்க தீர்மானித்து இருப்பதாக தெரிவித்தார்.

சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை சபை தொடர்ந்து தடுத்தால், சபைக்கு ஐந்தாண்டு காலத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.60 கோடியும், ரூ .300 கோடியும் செலவிடப்படுவது வீணாகிவிடும் என்று முதல்வர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்,  ஆந்திர சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இன்று சட்டமன்ற நிகழ்வில் அந்த சட்டமன்ற மேலவையை கலைக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ குடிவாடா அமர்நாத்தும் உறுதி செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ள நிலையில் இன்று இந்தத் தீர்மானம் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவைகள் செயல்பட்டு வருகின்றன.