கொரோனாவால் பலியானவர்களின் இறுதிச்சடங்கு: ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 31,103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இது வரை 16,464 பேர் குணம் பெற்றுள்ளனர். 14,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இது பற்றிய மறுஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.