ந்திர பிரதேசம்

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவுக்கு ஆந்திரா மாநிலத்தின் டெபுடி கலெக்டர் பணி நியமன உத்தரவை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் பி வி சிந்து.  இதை தொடர்ந்து ஆந்திர அரசு அவருக்கு ரூ. 3 கோடி ரொக்கப்பரிசு, அமராவதி நகரில் ஒரு குடியிருப்பு, மற்றும் குரூப் 1 அதிகாரியாக பணி ஆகியவற்றை வழங்க முன் வந்தது.  சட்டசபையில் இந்த தீர்மானம் கடந்த மே மாதம் ஒப்புதல் பெறப்பட்டது.

அரசுச் சட்டப்படி, அதிகாரிகள் நியமனம், மாநில சர்வீஸ் கமிஷன் அல்லது வேலை வாய்ப்புத்துறை மூலமே நடத்த முடியும்.  அதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.  அதன் பின் இந்த பணி நியமன கடிதம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு சிந்துவுடன் அவரது பெற்றோர்களும் வந்திருந்தனர்.

சிந்து மென்மேலும் வெற்றிகள் பெற்று, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் புகழ் தேடித் தர வேண்டும் என நாயுடு வாழ்த்தினார்.

சிந்து தனக்கு இந்த பணி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆயினும் தனது முதல் தேர்வு பாட்மிண்டனாகவே விளங்கும் எனவும் கூறினார்.

சிந்து ஐதராபாத் நகரில் பிறந்து வளர்ந்ததினால், தெலுங்கானா அரசும் அவருக்கு ஒரு வீடும், ரொக்கப்பரிசாக ரூ 5 கோடியும் அளித்துள்ளது.  அதே போல தெலுங்கானா அரசும் அவருக்கு அதிகாரி பதவியை அளித்திருந்தது.  ஆனால் சிந்து தன் பெற்றோர்களின் சொந்த ஊர் உள்ள ஆந்திராவை தேர்ந்தெடுத்தார்.