நீதிபதிமீது முதல்வர் விமர்சனம்: சிபிஐ விசாரணக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

அமராவதி:  நீதித்துறை மற்றும் நீதிபதிகள் பற்றி விமர்சனம் செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மீது, மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.  மாநில மக்களின் நலன் கருதி பல்வேறு அதிரடி திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி  அறிமுகம் செய்து வருகிறார். இது  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில்,   மாநில அரசின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்திட்ட முறையை அமல்படுத்தும் முடிவை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெகனின் முடிவுக்கு   ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், நீதித்துறை பற்றியும், நீதிபதிகள் பற்றியும் பதிவுகள் இடப்பட்டுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும், சமூக வலைதள போராளிகளும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

மேலும், முதல்வரும், உச்சநீதிமன்றத்துக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தலையிட்டு, சிஐடி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த   90–க்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் மீத சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மீது சிஐடி காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த உயர்நீதிமன்ற  நீதிபதி ராகேஷ் குமார் மற்றும் உமாதேவி அடங்கிய அமர்வு, காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதித்துறை மீதான விமர்சனத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க சிஐடி தவறிவிட்டது. எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம் என்று அறிவித்ததுடன,  ஜனநாயக ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் நீதித்துறைக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பது சாதாரண குடிமக்களின் மனதில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும். இது ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைத்துவிடும். நீதித்துறைக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் அரங்கேறி இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.

இத்தகைய செயலில் ஈடுபட்டது எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, குற்றம் செய்திருந்தால் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வாருங்கள். உரிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட சமூக வலைதளப் பதிவுகள் அனைத்தையும் நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களின் கணக்குகளை முடக்க வேண்டும். இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை 8 வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும். சிபிஐக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தர வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.