அமராவதி:

ந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று ஆந்திர மாநிலத்தில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து  ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருப்பதி செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்தியஅரசை கண்டித்து, தெலுங்குதேச எம்.பி.க்கள் கடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முடக்கினர். தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவில் இருந்து விலகியது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், இன்று மாநிலம் முழுவதும் முழுஅடைப்புக்கு ஆந்திர மாநில காங்கிரஸ், இடது சாரிகட்சிகள், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றம் ஆந்திரா பிராத்யோக ஹூடா சாதானா சமிதியும் போரட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆளும் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் ஒருசில அரசு பேருந்துகள்  காலையில் இயங்கியது.

ஆனால் காலை 9 மணி அளவில் திருப்பதி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அரசு பேருந்துக்கு தீ வைத்தனர்.  இதன் காரணமாக மாநிலம் முழுவதும்  போக்குவரத்து முடங்கி உள்ளது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,

இதன் காரணமாக தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஆந்திர எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  திருப்பதி செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.