டில்லி:

நேற்று முதல் டில்லியில் முகாமிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, டில்லி முதல்வரும் ஆத்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவுக்கு மத்திய அரசு உறுதிஅளித்தபடி சிறப்பு அந்தஸ்து கொடுக்காததால், பாஜக தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி உடைந்து, அதிலிருந்து வெளியேறியது தெலுங்கு தேசம் கட்சி.

அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று டில்லி வந்த சந்திரபாபு நாயுடு, நேற்று முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர், பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரியதாக கூறப்பட்டது.

மேலும், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர பவனில் தங்கியிருக்கும்  சந்திரபாபு நாயுடுவுடன் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.