விஜயவாடா

லைநகர விவகாரத்தில் ஆந்திர மக்கள் தமிழக வழியில் கோலப்போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.   இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் விதம் விதமான போராட்டங்கள் நடைபெற்றன.  அதில் ஒன்றாகத் தமிழகத்தில் சென்னையின் பெசண்ட் நகரில் 7 பேர் கோலப்போராட்டம் நடத்தி மக்களைக் கவர்ந்தனர்.   கோலத்தில் இந்தத் திட்டங்களை எதிர்த்து வாசகங்கள் எழுதியிருந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் மக்கள் அமராவதி நகர் தலைநகராக அறிவிக்கப்படும் என ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.   ஆனால் அரசு அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு விஜயவாடாவை புதிய தலைநகராக அமைக்க விரும்புவதாகத் தகவல்கள் எழுந்தன.  இந்த தகவல் அமராவதி நகர் அமைக்க நிலம் அளித்த விவசாயிகளுக்கு கடும் அதிருப்தியை அளித்தது.

அதையொட்டி கடந்த 2 வாரங்களாக மாநிலம் எங்கும் அமராவதியைத் தலைநகராக அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.    இந்நிலையில் அரசு அதிகார மையத்தை பரவலாக்க மூன்று தலைநகரங்கள் அமைக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியது.  அதன்படி விசாகப்பட்டினம் திட்டங்களுக்கான தலைநகராகவும் நீதித்துறைக்கு கர்நூல் மற்றும் நிர்வாகத்துக்கு அமராவதி எனவும் அமைய உள்ளதாகக் கூறப்பட்டது

இது ஆந்திர மக்களிடையே அதிருப்தியை மேலும் அதிகரித்தது.   இந்த போராட்டங்களை ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆதரித்து வருகின்றனர்.     மாநில அரசு தரப்பில் இது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என விளக்கம் அளித்த போதிலும் போராட்டம் தொடர்கிறது.

போராட்டக்காரர்கள் தற்போது தமிழகத்தின் வழியில் கோலப் போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர். விதம் விதமாக கோலங்கள் இட்டு அதில் அமராவதி நகரைத் தலைநகராக்க வலியுறுத்தும் வாசகங்களை எழுதி வருகின்றனர்.  அமராவதி பகுதியில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது ஆந்திரா முழுவதும் பரவி வருகிறது.