னந்தவரம்

ஆந்திராவில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்துக் கொள்ள வந்த  தலித் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் உள்ள தடிகொண்டா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான உண்டவள்ளி ஸ்ரீதேவி என்பவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவராக பணிபுரிபவர் ஆவார். ஸ்ரீதேவி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று முன் தினம்  குண்டூர் மாவட்டத்தில் துள்ளூர் பகுதியில் உள்ள அனந்தவரம் என்னும் ஊரில் மறைந்த முன்னால் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் நினைவு தின நிகழ்வு நடந்தது. அதில் ஸ்ரீதேவி கலந்துக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த சிலர் அவரை அதே ஊரில்  நடைபெறும் விநாயக சதுர்த்தி விழாவுக்கு அழைத்துள்ளனர். அங்குச் சென்ற ஸ்ரீதேவி அந்த பந்தலில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வணங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த கொம்மினேனி சிவையா என்னும் நபர் ஸ்ரீதேவியைத் திட்டி அங்கிருந்து செல்ல வேண்டும் என விரட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. சிவையா உயர் சாதியான சவுத்ரி பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் அவர் “இந்த தலித் பெண்ணை ஏன் இங்கு அனுமதித்தீர்கள்? இவரால் இங்கு தூய்மை கெட்டு விட்டது” எனச் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் சிவையாவுக்கும் ஸ்ரீதேவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர்  இரு தரபைய்ம் சமாதானம் செய்துள்ளனர். ஸ்ரீதேவி இது குறித்து,”சாதியின் பெயரால் என்னைச் சிறுமைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும் அதுவும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. என்னை இவ்வாறு அவமதித்தவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அந்தக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவருக்கும் தலித் என்றால் வெறுப்பு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பகுதி காவல் அதிகாரி சுப்பாராவ் அந்த சமயத்தில் சிவையா குடிபோதையில் இருந்ததாகவும் அவரும் அவர் உறவினர்களும் ஸ்ரீதேவி மீது சாதி குறித்துத் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிகழ்வு குறித்துப் பல பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளதாகவும் சிவையா மற்றும் அவர் உறவினர்கள் சாய், ராமகிருஷ்ணா, மற்றும் புஜ்ஜி ஆக்யோரையும் வழக்கில் சேர்த்துள்ளதாக்வும் தெரிவித்துள்ளார்.