வேலகபுடி,  அந்திர பிரதேசம்

பெண்களைப் போலவே ஆண்களும் துயருறுவதாக ஆந்திர பிரதேச பெண்கள் ஆணைய தலைவியான நன்னபனேனி ராஜகுமாரி கூறி உள்ளார்.

ஆந்திர மாநில பெண்கள் ஆணையத் தலைவி நன்னபனேனி ராஜகுமாரி.   இவர் பெண்களுக்கு ஆதரவாகவும் ஆண்களுக்கு எதிராகவும் எப்போதும் பேசி வருபவர்.  கடந்த 2017ஆம் வருடம் விசாகபட்டினம் அருகே இரு மைனர் சிறுமிகள் எட்டு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.   அவர்களை சந்தித்து பேசி அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் ராஜகுமாரி.

அப்போது அவர் பெண்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக கத்தியை வைத்திருக்க வேண்டும்  எனவும் யாராவது பெண்களை பலாத்காரம் செய்ய முற்படும் போது அவர்களின் பிறப்பு உறுப்பை அறுத்து விட வேண்டும் எனவும் பெண்களுக்கு ஆலோசனை கூறினார்.  இது போல பல நேரங்களில் ராஜகுமாரி ஆண்களுக்கு எதிராக பேசி வருவதை வழக்கமாக கொண்டவர் ஆவார்.

ராஜகுமாரி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள வேலகபுடி என்னும் இடத்தில் பெண்கள் நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசினார்.   அப்போது அவர், “சமீபத்தில் ஒரு பெண் தனது கணவரை அடியாட்கள் மூலம் கொலை செய்துள்ளார்.    நான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பவள் தான்.   ஆனால் அதே இரக்கம் ஆண்கள் மீதும் எனக்கு உண்டு.   தவறான  உறவுகளில் ஈடுபடும் பெண்களால் கொல்லப்படும் ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.

இது போல நிகழ்வுகளுக்கு டிவியில் வரும் தொடர்களே காரணம் ஆகும்.   அதில் வரும் சில தவறான பெண் பாத்திரங்களைப் பார்த்து பெண்கள் கெட்டுப் போய் விடுகின்றனர்.    இதனால் பல ஆண்கள் துயருறுகிறார்கள்.    எனவே ஆண்களை காப்பாற்றவும் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என நான் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன்”  எனக் கூறி உள்ளார்.