விசாகப்பட்டிணம்: ஆந்திர அரசின் புதிய தலைநகர நிர்மாண திட்டம், அமராவதி என்பதையும் தாண்டிய ஒன்று எனும் கருத்து தொணிக்கும் வகையில் பேசியுள்ளார் அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் போட்ஸா சத்யநாராயணா.

அதேசமயம், இந்த விஷயம் குறித்து விரிவாக எதையும் பேசுவதற்கு மறுத்த அவர், அமராவதி குறித்து ஒரு விரிவான திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் என்றும், அந்த அறிவிப்பிலேயே அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “பிற பகுதிகளில் கட்டுமானச் செலவினம் ரூ.1 லட்சம் என்றால், அமராவதியில் செலவினம் ரூ.2 லட்சம். இதன்மூலம் மக்களின் பணம் தேவையின்றி வீணாகிறது. மேலும், பலத்த மழை பெய்தால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

எனவே, அமராவதியில் மக்களை வெள்ளத்தினின்று காக்க, நாம் புதிய வடிகால்களையும், சிறிய அணைகளையும் கட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான உரையாடல்கள் நடந்துகொண்டுள்ளன. இத்தகைய அனைத்து அம்சங்களையும் மனதில்கொண்டு, அரசு தனது கொள்கையை விரைவில் அறிவிக்கும்” என்றார் அமைச்சர்.

அமராவதிக்கு மாற்றாக, பிரகாசம் மாவட்டத்திலுள்ள டொனகொண்டா என்ற இடம் மாற்றாக அமையுமா? என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, இத்தகைய கருத்துகள் தவறானவை. மாற்று இடம் குறித்து தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று மறுத்தார் அவர்.