டெல்லி:

நாட்டின் நிதிஅமைச்சரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான நிர்மலா சீத்தாராமன், உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 34வது இடம் கிடைத்துள்ளது.

பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிக்கை  நடப்பு ஆண்டில், உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகை,  உலக அளவில், அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது, இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ஜெர்மனியின் சான்சிலர் ஆஞ்சலா மெர்கல் இடம் பெற்றுள்ளார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். நடப்பு ஆண்டில் முதலிடம் பிடிக்க காரணமாக,   சிரிய அகதிகளை ஜெர்மனி நாட்டிற்குள் அனுமதித்ததற்காக இந்த ஆண்டின் தலை சிறந்த பெண்ணாக முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது.

2வது இடத்தை,  ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டினா லெக்ராண்ட் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு 34வது இடம்கிடைத்துள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 இடத்தில் உள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரெம்ப் 42ஆவது இடத்தில் உள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு பின்தங்கி உள்ளனர். நிர்மலா சீத்தாராமன் முன்னேறி உள்ளார்.

இத்துடன்  உலக அரசியல்வாதிகளை நோக்கி,  “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று பேசி உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்த  சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி  கிரேட்டா தன்பெர்க் இந்தப் பட்டியலில் 100ஆவது இடம் பிடித்துள்ளார்.16 வயதில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கிரேட்டா தன்பெர்க் பெற்றுள்ளார்.