ஹரியானாவில் நில உரிமையாளர் ஒருவரின் மகன், புதிய ஜாகுவார் கார் வாங்க வேண்டும் என்கிற தனது கோரிக்கையை தந்தை நிராகரித்ததையடுத்து, விலையுயர்ந்த தனது பி.எம்.டபிள்யூ சொகுசு காரை ஆற்றில் தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரை சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கு, அவரது பெற்றோர் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளனர். தனக்கு ஜாகுவார் கார் வாங்கி தர கோரி அந்த இளைஞர் சமீப நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அவரது பெற்றோர் அவருக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளனர். ஆனால் தான் கேட்ட ஜாகுவாருக்கு பதிலாக, பி.எம்.டபிள்யூ காரை தனது பெற்றோர் பரிசளித்துவிட்டதால் கோபமுற்ற அந்த இளைஞர், அங்கு உள்ள ஆறு ஒன்றில், பரிசாக கொடுக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ காரை தள்ளிவிட்டுள்ளார். அந்த இளைஞரின் செயல், அப்பகுதியில் இருந்த பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர், “காரை ஆற்றில் தள்ளிவிடுவதை அந்த இளைஞர் வீடியோவாக படம் பிடித்துள்ளார். அதை சமூக ஊடகத்தில் பதிவிட்டு, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். புல் அடர்ந்த பகுதியை கொண்ட ஆற்றின் நடுப் பகுதியில் அந்த கார் சிக்கிக்கொண்டது. இதை பார்த்த அவர், உள்ளூர் ஓட்டுநர்கள் சிலர் மூலம் மீண்டும் அந்த காரை ஆற்றிலிருந்து மீட்க முயற்சித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய இளைஞர், ஆற்றில் தள்ளிவிட்ட கார் கார் பி.எம்.டபிள்யூ 3-சீரிஸ் அல்லது 5-சீரிஸ் வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. அத்தோடு, அந்த இளைஞரின் தந்தை பெரும் நிலத்திற்கு சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.