அமராவதி:

ஆந்திராவில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்பியாகிவிட்டார். தன் உயரதிகாரிக்கு எம்பி சல்யூட் அடிப்பதும், எம்பிக்கு உயரதிகாரி சல்யூட் அடிப்பதும் போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஆந்திராவில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கோரண்ட்லா மாதவ். இவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர் கிறிஸ்தப்பா நிம்மலாவை 1,40,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கோரண்ட்லா மாதவ் வந்தபோது, அவரது உயரதிகாரியான சிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டன்ட் மெஹ்பூப் பாஷா அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

தன் உயரதிகாரியைப் பார்த்தவுடனேயே சல்யூட் அடித்தார் கோரண்ட்லா மாதவ். பதிலுக்கு அவரது உயர் அதிகாரி மெஹ்பூப் பாஷாவும் சல்யூட் அடித்தார்.

இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து கோரண்ட்லா மாதவ் கூறும்போது, முதலில் அவர் என்னால் முன்னாள் அதிகாரி. எங்களிடம் பரஸ்பர மரியாதை இருந்தது என்றார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த டிசம்பரில் தான் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவியை கோரண்ட்லா மாதவ் ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமா போலீஸ் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறி, இவரது வேட்புமனுவை முதலில் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, மாதவின் ராஜினாமாவை ஏற்று, அவரை பணியிலிருந்து விடுவிக்குமாறு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.