காங்கிரஸ் பத்திரிகை மீது ரூ. 5000 கோடி நஷ்ட ஈடு வழக்கு போடும் அம்பானி

கமதபாத்

காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை ரஃபேல் போர் விமான விவகாரத்தில் தவறான செய்தி வெளியிட்டதாக ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி வழக்கு தொடர்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.   இதில் அம்பானியின் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் லாபத்துக்காக மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தது.   அதில் ரஃபேல் விமான ஒப்பந்தம் போடுவதற்கு 10 தினங்கள் முன்பு ரிலையன்ஸ்  பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் நலம் கருதி போடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அதை எதிர்த்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை அகமாதாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.  இந்த அவதூறு வழக்கு நேஷனல் ஹெரல்ட் பத்டிரிகையின் பதிப்பாளர், ஆசிரியர் மற்றும் கட்டுரையை எழுதிய விஷ்வதிபக் ஆகியோர் மீது தொடரபட்டுள்ளது.

வழக்கு மனுவில், “எங்களது நிறுவனத்துக்கு அவதூறும் களங்கமும் ஏற்படுத்தும் வகையில் நேஷனல் ஹெரால்ட்  பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.  இதனால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 5000 கோடி வரை நஷ்டம் உண்டாக உள்ளது.   அதை ஒட்டி எங்களுக்கு ரூ. 5000 கோடி நஷ்ட ஈடு வழங்க பத்திரிகைக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி ஜ தமகுவாலா பத்திரிகை பதிப்பாளர்,  ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் ஆகியோருக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.