எரிக்ஸனுக்கு அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை வழங்கிய அனில் அம்பானி: சிறை என உச்சநீதிமன்ற அறிவிப்புக்கு பணிந்தார்

மும்பை:

ஸ்வீடன் நிறுவனமான எரிக்ஸனுக்கு அளிக்க வேண்டிய தொகையை, அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடி வழங்கினார் அனில் அம்பானி .

கடந்த 2014-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்வீடனின் எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த விவகாரத்தில், எரிக்ஸனுக்கு ரூ. 550 கோடியை ரிலையன்ஸ் தர வேண்டியிருந்தது. இந்த தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை எரிக்ஸன் நிறுவனம் நாடியது.

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் 4 வாரத்திற்குள் எரிக்ஸனுக்கு வழங்க வேண்டி தொகையை, வட்டியும் முதலுமாக அனில் அம்பானி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் 3 மாதம் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 550 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ. 21 கோடி சேர்த்து மொத்தம் ரூ. 571 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் தனது தொழிலை கடந்த 2017-ல் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.