இந்தியாவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, 1999ம் ஆண்டு புதுடில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லாவில் தனது அணியை சேர்ந்த சக வீரரான சடகோபன் ரமேஷ், பாகிஸ்தானுக்கு எதிரான தனது வரலாற்று சிறப்புமிக்க 10வது விக்கெட்டை எப்படிக் கெடுக்க முற்பட்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மனுடனான உரையாடலின் போது, பாகிஸ்தான் அணியின் 9வது விக்கெட்டான சக்லைன் முஷ்டாக்கை வீழ்த்திய பின்னர், 10 விக்கெட்டுயும் தானே வீழ்த்தட்டும் என இந்திய அணியினர் முடிவெடுத்ததாக கும்ப்ளே கூறினார்.

இது தொடர்பாக விளக்கியுள்ள கும்ப்ளே, “ஒருகட்டத்தில் ஜவகல் ஸ்ரீநாத் வீசிய பந்தில் வக்கார் யூனிஸ் பந்தை தூக்கி அடிக்க, அதை கேட்ச் பிடிக்க சென்றார் ரமேஷ். அந்த கேட்சை தவறவிடுவதாக தான் பேசியிருந்தோம். நல்லவேளையாக பந்து பீல்டர் இல்லாத பகுதியில் விழுந்தது. அணியின் திட்டத்தை ரமேஷ் கேட்டதாக நான் நினைக்கவில்லை. அதனால் தான் அந்த பந்தை பிடிக்க சென்றார். நான் 9 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, 10வது விக்கெட்டிற்காக காத்திருப்பதை மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்குப் பின், கும்ப்ளே வாசிம் அக்ரமின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியராகவும், இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்குப் பிறகு இச்சாதனையை படைத்த உலகின் இரண்டாவது வீரராகவும் ஆனார். அந்த போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் கும்ப்ளேவின் 10 விக்கெட் வீழ்ச்சி என்பது அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு சாகித் அப்ரிடி – சயீத் அன்வர் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. போட்டியில் மாற்றம் ஏற்பட்டது உணவு இடைவேளைக்கு பிறகு தான். இது குறித்து பகிர்ந்துள்ள கும்ப்ளே, “உணவு இடைவேளையின் போது நான் மகிழ்ச்சியாக இல்லை. எங்களுடைய பயிற்சியாளர் அனுஷுமன் கேக்வத் வந்து, போட்டியை நமது வசமாக்குங்கள் என்று சொன்னது நினைவில் இருக்கிறது. இதற்கான பொறுப்பை நான் தான் ஏற்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஒரு அனுபவ ஸ்பின்னர் என்பதால், நான் தான் பொறுப்பேற்றாக வேண்டும். அடுத்த 4 விக்கெட்களில் ஒன்றை வீழ்த்தினால் கூட நிச்சயம் போட்டியை மாற்றிக்காட்ட முடியும் என்று நம்பினேன்” என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய வி.வி.எஸ் லக்ஷ்மணன், சேலஞ்சர்ஸ் டிராபி தொடரில் 1995ம் ஆண்டு அனில் கும்ப்ளேவுக்கு எதிரான தனது ஆட்டம் குறித்து விவரித்தார். அது குறித்து பேசிய அவர், “அது ஒரு மோசமான நினைவு. ஹைதராபாத் போட்டியிலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் நான் நன்கு விளையாடியதால் தான் இந்தியா பி அணிக்காக சேலஞ்சர்ஸ் டிராபிக்கு தேர்வானேன். போட்டி லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடந்தது. பந்து என்னுடைய கால் பேடில் பட்டது தெளிவாக எனக்கு கேட்டது. இதற்கு முந்தைய பந்திலும் அதையே செய்தேன். அடுத்த பந்து என்னுடைய பேட்டில் படுவதற்கு முன்னதாக, பேடில் உரசியது. உடனடியாக கும்ப்ளே விக்கெட் கேட்க, அவுட் கொடுக்கப்பட்டது” என்றார்.

அதற்கு பதில் அளித்த கும்ப்ளே, “நான் உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுடைய ஆட்டங்கள் குறித்தும் கேட்டிருக்கிறேன். ஒரு வீரரை அவுட் செய்ய அப்படியான பந்துவீச்சையே நான் தேர்வு செய்வேன். அன்றைக்கு என்னுடைய அதிர்ஷ்டம், விக்கெட் கிடைத்தது. அதன் பிறகு கூட உங்களிடம் வந்து, அதுபோன்ற ஒரு ஷாட்டை அடிக்க முன்வராதீர்கள் என்று கூறினேன்” என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வெங்கடபதி ராஜு மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் 1993ம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தான் கும்ப்ளே தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக லக்ஷ்மணன் அந்த பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லக்ஷ்மணன், அதில் 84 போட்டிகளில் கும்ப்ளே உடனேயே விளையாடியிருக்கிறார். கும்ப்ளே தலைமையிலான அணியிலும் 2006 மற்றும் 2008ம் ஆண்டு லக்ஷ்மணன் விளையாடியிருக்கிறார். 2008ம் ஆண்டி இறுதியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக 619 விக்கெட்களை வீழ்த்திய ஒரே நபர் என்கிற சாதனையுடன், கும்ப்ளே தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.