பெங்களூரு: இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது மகிழ்ச்சிதான் என்றும், அதேசமயம் தனது ஓய்வு நிகழ்வு சற்று மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் அனில் கும்ளே.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 619 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ளே, கடந்த 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பேற்றார். இவரது பயிற்சி காலத்தில், இந்திய அணி பங்கேற்ற 17 டெஸ்ட் போட்டிகளில், ஒன்றில் மட்டும்தான் தோற்றது.
கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர் தனது பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “இந்திய வீரர்களுடன் ஓராண்டு மேற்கொண்ட பயணம் மகிழ்ச்சியானது. அணியினருடன் டிரெஸ்ஸிங் அறையைப் பகிர்ந்து கொண்டது வித்தியாசமான உணர்வுகளுக்கு வித்திட்டது.
என் காலத்தில் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டேன். எனவே, அந்த விஷயத்தில் எவ்வித வருத்தமும் இல்லை. அதேசமயம், எனது ஓய்வு நிகழ்வு சற்று சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்திருக்கலாம்.
ஆனாலும், நேரம் அப்படித்தான் எனும்போது அதை கடந்துதான் ஆக வேண்டும். ஒரு பயிற்சியாளருக்கு இந்த உண்மை புரிவது அவசியம்” என்றுள்ளார்.