சென்னை:

சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி,  சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோடு அருகே கால்நடை பராமரிப்புத்துறைக்குச் சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா அமைய உள்ளது.

இந்த பூங்காவில்,  கால்நடை பண்ணை வளாகம், நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் தலைமையில் கால்நடைப்பூங்கா அமைக்கும் பணிகள்  குறித்து இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டதின்போது, கால்நடை பராமரிப்பு பூங்காவில், உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகள் அமைப்பதும் தொடர்பாகவும்,

அதுபோல,  பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்து வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கால்நடைத் துறையின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்த நவீன பூங்கா, தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்க ளும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.