நீட் தேர்வு – அனிதா தற்கொலை: பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்!

சென்னை,

மிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தியதன் காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற தமிழக கிராமப்புற மாணவி, அனிதா தனது மருத்துவர் கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பஙள்ளி மாணவர்கள் இன்று நீட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அனிதா மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்  அந்த பகுதி சாலையை மறித்து, நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே மயிலாடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு பள்ளி மாணவர்களும், நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் அருகே செந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் நீட்டுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் போராடி வருகின்றனர்.

இதுபோல தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.