அரியலூர்:

நீட் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரியலூர் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு எதிராக 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தின் காரணமாக, உச்சநீதி மன்றம் வரை சென்று மன்றாடிய தலித் மாணவி அனிதா, கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி அனிதாவின் மரணம் காரணமாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடும் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர். மாநில அரசின் கையாளாகத தணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனிதாவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அனிதாவின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

இன்று அவரது உடல் அடக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அரியலூர் நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சியினரும் மாணவி அனிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்த வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.