ரஃபேல் ஊழல் குறித்து ஏராளமான புகார் என்னிடம் உள்ளது : அன்னா அசாரே

--

டில்லி

ஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து தன்னிடம் ஏராளமான புகார்கள் உள்ளதாக அன்னா அசாரே தெரிவித்துள்ளார்.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்க கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர் அன்னா அசாரே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அவர் போராட்டத்தை ஒட்டி கடந்த 2013 ஆம் வருடம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா  அமைக்கப்படவில்லை.

அதன் பிறகு கடந்த  2014ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் பாஜகவினர்  ஆட்சிக்கு வந்தால் லோக்பால் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.   அதனால் வென்று ஆட்சி அமைத்தும் பாஜக அரசு. இதுவரை லோக்பால் அமைக்கவில்லை.   கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் லோக்பால் அமைக்காததால் பாஜக அரசு மீது அனா அசாரே கடும் அதிருப்தியில் உள்ளார்.

அதை ஒட்டி அவர் வரும் 30 ஆம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் லோக்பால் அமைக்கக் கோரி மூன்றாவது முறையாக உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு முறையும் அரசு அவருக்கு வாக்குறுதி அளித்து அதன் பிறகு நிறைவேற்றாமல் உள்ளது.

தனது உண்ணாவிரதம் குறித்து அன்னா அசாரே செய்தியாளர்களிடம், “லோக்பால் அமைக்கப்பட்டிருந்தால் ரஃபேல் போன்ற ஊழல்கள் நடந்து இருக்காது. என்னிடம் ரஃபேல் குறித்து ஏராளமான புகார்கள் உள்ளன. அவைகளைப் பற்றி நான் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்த உள்ளேன். அந்த புகார்களை முழுவதுமாக படித்து விட்டு இன்னும் இரு தினங்களில் நான் உங்களிடம் பேசுகிறேன்.

ரஃபேல் விவகாரத்தில் ஒப்பந்தம் போடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு எவ்வாறு ஒப்பந்தத்தில் பங்குதாரர் ஆக முடிந்தது என்பது மட்டும் எனக்கு புரியவே இல்லை.

முந்தைய அரசு லோக்பால் அமைக்கப்படும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் 1.5 மடங்கு விவசாயப் பொருட்களுக்கு அடிப்படை விலைகள் வழக்கும் என எழுத்து பூர்வமாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. எனவே இம்முறை இந்த அரசு ஏதும் பொய் வாக்குறுதி அளித்து எனது உண்ணாவிரதத்தை முடிக்கலாம் என எண்ண வேண்டாம். நான் என் உடலில் உயிர் உள்ளவரை இந்த உண்ணாவிரதத்தை தொடர்வேன்.

முந்தைய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் குடியரசு நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றியது. தற்போதைய அரசும் அதையே செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் தற்போதைய அரசுக்கு உத்தரவு இட்டபோதும் அதை மதிக்காமல் உள்ளது. இதேல்லம் ஒரு அரசே இல்லை. ஒரு மளிகைக் கடை போல் உள்ளது.

விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் தொழிலதிபர்களைப் பற்றி மட்டுமே இந்த அரசு கவலை கொண்டு அவர்களுடைய கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.