நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி டிசம்பர் 20ல் மவுன விரதம்! அன்னா ஹசாரே

டெல்லி:

நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி டிசம்பர் 20ந்தேதி  மவுன விரதம் இருக்கப்போவதாக பிரபல சமூக சேவகர்  அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார். மேலும், தூக்குக் தண்டனை பெற்றுள்ள குற்ற வாளிகள் 426 பேரின் மரண தண்டனையை  நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? என்றும் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி  கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதன்மீது மத்தியஅரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி ஒருவருக்கு கடைசியாக 2005ம் ஆண்டு ஆகஸ்டில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. தற்போது, 426 குற்றவாளிகள் மரணதண்டனைக்கு காத்திருக்கிறார்கள்.  நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள், தடைகள் மற்றும் சிரமங களை மக்கள் அநீதி என்று உணரத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய ஐதராபாத் சம்பவத்தில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெகுஜன ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது. கொடூர குற்றவாளிகளை, என்கவுன்டர் போன்ற சம்பவங்களை நடத்தியே ஒழிக்க வேண்டும் என்று மக்கள்  இப்போது விரும்புகிறார்கள்.

எனவே, பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், ஏழு ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், . நிர்பயா  வழக்கின் தாமதம் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அராஜகத்தை ஏற்படுத்தக் கூடும். கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் இதுபோன்ற வழக்கில் தூக்கு எதுவும் நிறை வேற்றவில்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, , ‘‘கடந்த 2012ல் டெல்லியில் நடந்த நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி, வருகிற 20ம் தேதி முதல் ராலேகன்  பகுதியில் மவுன விரதம் கடைப்பிடிக்க இருப்பதாகவும்,  இதுபோன்ற  குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நான் காலவரையின்றி உண்ணாவிரதம் இருப்பேன்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.