அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிகள் மெரினா கடற்கரையில் இருந்து மாற்றப்படும்!: டிராபிக் ராமசாமி

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சமாதிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. Patrikai.com இதழிடம் தெரிவித்தார்.

கடற்கரை ஓரத்தில் தலைவர்களின் சமாதிகளை அமைப்பதற்கு பல காலமாகவே எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அப்போதே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

அண்ணா சமாதி

“கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவுவரை கட்டிடங்கள் எழுப்பக்கூடாது என்று கடலோர ஒழுங்குமுறை சட்டம் கூறுகிறது. ஆகவே ஜெயலலிதாவின் சமாதியை மெரினா கடற்கரையில் அமைக்கக்கூடாது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

ஆனால், ஏற்கெனவே அங்கு இருக்கும் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி எழுப்பப்பட்டது.

எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்துக்குள் ஜெ. சமாதி

“எம்.ஜி.ஆர். சமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.  . கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது என்றாலும்,  எம்.ஜி.ஆர். சமாதி என்பது ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம். ஆகவே அங்கே ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்து சமாதி எழுப்புவது தவறல்ல” என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதாவது, “கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சமாதி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அங்கிருந்து அகற்றி கோட்டூர்புரம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைக்க வேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்தார்.

டிராபிக் ராமசாமி

இது குறித்து டிராபிக் ராமசாமியை தொடர்புகொண்டு கேட்டோம்.

அவர், “இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த பதில் மனுவிலேயே கடலோர ஒழுங்கு முறை சட்டத்தை மீறித்தான் மெரினா கடற்கரையில் சமாதிகள் உள்ளன என்று தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

கடலோரப் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை கட்டுமானங்கள் கூடாது என்று மத்திய அரசே சட்டமியற்றியிருக்கிறது. ஆகவே குறிப்பிட்ட சமாதிகளை அகற்றி வேறு இடத்துக்கு வைக்கும்படியே இவ்வழக்கில் தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று patrikai.com  இதழிடம் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.