சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை திடீர் அகற்றம்!

--

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைக்கப்பட இருப்பதால், ஏற்கனவே அங்கிருந்த அண்ணா சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு உள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் இரு தலைவர்களின் சிலையும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த நிறுவப்பட உள்ளது. அதற்காகவே தற்காலிகமாக அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான  கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7ந்தேதிஉடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் மறைந்த 100வது நாள் (நேற்று) நவம்பர் 15ந்தேதி. அன்றைய தினத்தில் கருணாநிதியின் உருவ சிலையை அண்ணா அறிவாலயத்தில் வைக்க திமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை தயார் செய்யப்பட்டு அண்ணா அறிவாலயம் வந்துள்ளது.  இந்த நிலையில் சிலை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் முகப்பில்  வைக்கப்பட்டு இருந்த அண்ணா சிலை தற்காலிகமாக இன்று அகற்றப்பட்டது. அந்த இடம்  சீர் செய்யப்பட்டு, இரு தலைவர்களின் சிலையும் அருகருகே வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் ஓரிரு நாளில் இரு சிலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படும் என்றும் திமுகவினர் கூறி உள்ளனர்.