மறு மதிப்பீடு லஞ்சவிவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

சென்னை:

பிரபலமான சென்னை  அண்ணா பல்கலைக்கழத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு செய்வதில்  கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இனிமேல் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரும் மாணவர்களின் முன்னிலையிலேயே மறு மதிப்பீடு செய்யலாம் என்று  அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் சிலபஸ் மற்றும் கேள்வி வினாத்தாள் குறித்து அண்ணா பல்கலைக் கழகமே அறிவித்து நிர்வகித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடையும் மாணவ மாணவிகள், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும்போது, தாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மறுமதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டுவர  உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் முயற்சிகள் எடுத்து வந்தது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

முதற்கட்டமாக  கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  புதிய மறுமதிப்பீடு முறையில், மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள் முன்னிலையில், அந்தப் பாடத்தை நடத்திய ஆசிரியர், அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் ஒருவர் மற்றும் துறைத்தலைவர் அல்லது மறுமதிப்பீட்டைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஆசிரியர் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாணவருக்கு மறுமதிப்பீட்டில் எழும் சந்தேகத்தை ஆசிரியர்கள் குழு பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் மாணவரின் மதிப்பெண் அவரது விடைத்தாளின் பின்பக்கத்தில் எழுதி ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் கையெழுத்திட வேண்டும்.

மறுமதிப்பீட்டில் பதினைந்து மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக பெற்றிருந்தால் இந்தக் குழு அதற்கான விளக்கத்தை யும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.