அண்ணா பல்கலை தேர்வு வினாத்தாள் முறைகேடு: 2 மாணவர்கள் கைது

சென்னை:

ண்ணா பல்கலை. தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ண்ணா பல்கலைகழகத்தில் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது சம்பந்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது.  இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து சிபி சிஐடி காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் வினாத்தாள் வெளியானது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கிடுக்கிப்படி விசாரணையில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையின்போது, வினாத்தாள்  அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு மைய ஊழியரின் மூலமாக வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேள்வித்தாளை விற்பனை செய்தவர் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் காஞ்சனா என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தலைமறைவாகவுள்ள காஞ்சனாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைகழகத்தின் ரகசிய பணியில் தற்காலிக ஊழியரை நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது அண்ணா பல்கலைகழகத்தில் 500 பேர் தற்காலிக பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.