சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி பாஸ் செய்யும் வகையில், அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.

அதன்படி, கடந்த 20 ஆண்டுகளாக தேர்வுகளில் அரியர் வைத்திருப்போர், மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

பொதுவாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்கள் 5 முறைகள் மட்டுமே தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும். ஆனால், இதிலும் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் பொறியியல் பட்டதாரிக்கான தகுதியினை இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தரப்பில், அரியர் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத வாய்ப்பு வழங்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  அரியர் வைத்திருக்கும் தேர்வுகளை மாணவர்கள் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

அதன்படி,  வரும் ஏப்ரல்  /மே 2020 மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, கடந்த 20 ஆண்டுகளில் அரியர் வைத்திருப்போர் தேர்வெழுத இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் https://annauniv.edu/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.