சென்னை,

ந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் உறுப்பு  கல்லூரிகளின் பாடத் திட்டம் மாற்றப்படுகிறது. மேலும்  பொறியியல் கல்வியில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மேலும் மாணவர்கள் மதிப்பெண் குறித்து கிரேடிங் சிஸ்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கான இயக்குநரும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் கீதா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் உள்ள இணைப்பு பொறியியல் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களும் இந்தமுறையைப் பின்பற்றுவார்கள் என்றும் கூறி உள்ளார்.

நேற்று  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 22-வது பாடத்திட்டங்களுக்கான நிபுணர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு முதல்  பொறியியல் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து விளக்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறை (Choice Based Credit System (CBCS)   அமல்படுத்தப்படுகிறது.  ஒவ்வொரு துறையிலும் முதன்மை பாடங்களைத் தவிர, விருப்பப்பாடங்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்தப்பாடங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

மூன்றாவது செமஸ்டரில் இருந்து எட்டாவது செமஸ்டர் வரை தங்களுடைய துறையைத்தவிர இதர துறையில் உள்ள விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கவும் வாய்ப்பு உண்டு.

ஒவ்வொரு பாடத்துக்கும் குறிப்பிட்ட கிரடிட் புள்ளி மதிப்புகள் வழங்கப்படும்.

ஒரு செமஸ்டரில் கடினமாக உள்ள இரண்டு பாடங்களை படிக்காமல் விட்டு விடலாம். இதைப்போலவே, விருப்பமான இரண்டு பாடங்களைத் கூடுதலாக தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

இன்ஜினீயரிங் டிசைன், இன்டர்ன்ஷிப், கருத்தரங்குகள், தொழில்நிறுவனப் பயிற்சிகள், கோடைக்கால திட்டப்பணிகள், ஒரு குறிப்பிட்ட நிலை நேர்வு பற்றிய ஆய்வு (Case Study) போன்ற வேலைவாய்ப்புக்கு உதவும் வகையிலான பயிற்சிகளை பாடத்திட்டத்தில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முதன்மையான பாடங்களாக இல்லாமல் விருப்பத்தின் பெயரில் மதிப்புக்க கூட்டப்பட்ட படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இவ்வாறு தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்புகள் குறித்த விவரம்  மதிப்பெண் தாளில் அச்சிட்டு வழங்கப்படும். இதைப்போலவே, அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டுதல்படி, ஆன்லைன் கோர்ஸ்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

அதேபோல் மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் வகுப்பில் கலந்துகொண்டு படித்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.  இதன்மூலம் அரியர் என்ற முறை இல்லாமல் போய்விடும். தேர்ச்சி பெறாத பாடங்களைப் படிக்க வகுப்பில் கலந்துகொள்வது கட்டாயமில்லை என்றாலும், வகுப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படும் Internal Exam-யை திரும்ப எழுத வேண்டும். அதன்பின்பு இறுதித் தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

தற்போது S, A, B, C, D, E,U, I, W என்ற கிரேடிங் முறை இருக்கிறது. இது மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக இனிமேல்,  O (Outstanding- 91-100 மதிப்பெண்), A+ (Excellent- 81-90 மதிப்பெண்), A (Very Good- 71-80 மதிப்பெண்), B+ (Good – 61- 70 மதிப்பெண்), B (Above Average – 50- 60 மதிப்பெண்), RA (50 மதிப்பெண்ணுக்குக் குறைவான மதிப்பெண், SA (Shortage of Attendance), W (வகுப்பில் இருந்து விலகிக்கொள்ளல்) என்று மாற்றப்பட்டு உள்ளது.

முதல் இரண்டு வருடங்கள் பொறியியல் படிப்பைப் படித்துவிட்டு ஒரு வருடம் பயிற்சி பெறவோ அல்லது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றவோ செய்யலாம்.

ஓராண்டுக்குப் பின்னர், மீண்டும் படிப்பை தொடரச் செய்யலாம். இந்த முறையைப் பயன்படுத்த அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 8.5-க்கு குறைவில்லாத கிரேடு பாயிண்ட்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டு ‘சி’ புரோகிராமிங் மொழி குறித்த பாடத்தைப் படிக்கிறார்கள். இனி, இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டில் ‘சி’ புரோகிராமிங் பாடத்துக்கு பதிலாக ‘பைதான் (Python) புரோகிராமிங் பாடத்தை அறிமுகப்படுத்தப்படு கிறது.

தற்போது, முதலாவது மற்றும் இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடத்தை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும்.

ஆனால் புதிய பாடத்திட்டத்தின்படி,  இனி, முதல் செமஸ்டரில் மட்டும் வேதியியல் முதன்மை பாடங்களில் ஒன்றாக இருக்கும். இரண்டாவது செமஸ்டரில் விருப்பப்பாடங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள். இதனால், இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடம் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய அவசியம் மாணவர்களுக்கு ஏற்படாது.

மாணவர்கள் ஆறு செமஸ்டர் வரை அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று, ஒட்டுமொத்தமாக 7.5 கிரேடு பாயின்ட்களைப் போற்றிருந்தால், எட்டாவது செமஸ்டர் பாடத்தை ஏழாவது செமஸ்டரிலேயே படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

எட்டாவது செமஸ்டரில் திட்டப்பணிகளை மட்டும் செய்தால் போதுமானது.

பொறியியல் படிப்பில் சேர்ந்து பதினான்கு செமஸ்டர்களுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேட்டரல் முறையில் சேர்பவர்கள் 12 செமஸ்டர்களின் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். 

ஐந்து ஆண்டுக்குள் எல்லாத் தேர்வுகளையும் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றும், ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளி 8.5-க்கு குறைவில்லாமல் இருந்தால் முதல் வகுப்பில் Distinction-யுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும்.

ஆறு ஆண்டுக்குள் அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளியில் 7.0-க்கு குறைவில்லாமல் பெற்றிருந்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும்.

புதிய உத்தரவு…விரைவில்

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும் தயாராகி வருவதாக கூறப்படுகறது.

இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது” என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

“10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது.

இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும்.

இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்” என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

‘பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது.

இதில் ‘பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது’ என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.  மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்” என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.

அண்ண பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்புகள் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.