சென்னை:  அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படும் படிப்புகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என  சென்னை உயர்நீதி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-21 ஆம் ஆண்டில் எம்.டெக் படிப்பில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பிரிவுகளுக்கு  மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து மாணாக்கர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான  வழக்கை விசாரித்து வரும்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  புகழேந்தி, கடந்த 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,   மனுதாரர்கள் தரப்பில்,  அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ள  முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த   அண்ணா பல்கலைக்கழகம், இதுதொடர்பாக ஏற்கனவே  உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்து உள்ளதாகவும், இந்த படிப்புக்கான நிதியை மத்தியஅரசு நிறுத்தி விட்டதாகவும் கூறியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த  நீதிபதி புகழேந்தி, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டியதுதானே என்று கண்டித்ததுடன்,  பணத்திற்காக படிப்பை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்று விமர்சித்ததுடன்,  மருத்துவப்படிப்பில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் நிலையில், எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைக்கழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா என்றும் வினவியதுடன்,  இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த 8ந்தேதி நடைபெற்ற மறுவிசாரணையின்போது,  எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியது. மேலும்,  மாநில அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது.

இதைத்தொடர்ந்து வழக்கு 15ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், குறிப்பிட்ட மேற்படிப்புகளுக்கு டிசம்பர் 31ந்தேதிக்கு முன்பு விண்ணப்பித்திருந்த 45 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஏஐசிடியு  கூறியிருப்பதாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து  தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மனோகரன்,  குறிப்பிட்ட இந்த இரண்டு படிப்புகளில் சேருவதில் ஏ.ஐ.சி.டி.இக்கு எந்தப் பங்கும் இல்லை என தெரிவித்தார்.
இதையடுதது, கருத்து தெரிவித்த நீதிபதி புகழேந்தி, அனைத்து பல்கலைக்கழகங்களும் புதிய படிப்புகளைத் தொடங்குகின்றன,  ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படும் படிப்புகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று காட்டமாக விமர்சித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.