சென்னை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் புகாரில் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்குக் குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் போது தங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பது வழக்கம்.   பலர் இம்முறையில்  தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களுக்குச் சரியான  மதிப்பெண்கள் பெறுவதும் வழக்கான ஒன்றாகும்.

ஆனால் இவ்வாறு மறு மதிப்பீடு செய்வதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.   அத்துடன் தேவைக்கு அதிகமான விடைத்தாள்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகம் உள் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.   இந்த புகாருக்கு முக்கிய காரணம் 7 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டில் 75 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகும்.

ஒரு மாணவர் தாம் 7 மதிப்பெண்கள் மட்டும் பெற்றதை எதிர்த்து மறு மதிப்பீட்டுக்கு  விண்ணப்பம் செய்திருந்தார்.   அப்போது அவருக்கு 45 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.  பொதுவாக 15 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால் அந்த விடைத்தாள்கள் மீண்டும் ஒரு முறை மதிப்பீடு செய்வது வழக்கமாகும்.   அதன்படி இரண்டாம் முறை மறு மதிப்பீடு செய்த பொது 75 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதைப் போல் மற்றொரு புகாரில் ரூ.62 கோடி மதிப்புள்ள விடைத்தாள்கள் அதிக  அளவில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    அதாவது 2 லட்சம் விடைத்தாள்கள் தேவையாக உள்ள போது 20 லட்சம் விடைத்தாள்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த இரு புகார்களையும் விசாரித்த பல்கலைக்கழக விசாரணை ஆணையம் தனது  அறிக்கையை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணுப்புத் துறையிடம் அளித்துள்ளது.   இந்த புகார் குறித்து ஏற்கனவே முன்னாள் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.