சென்னை:
ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கலந்த 2018 ஆம் ஆண்டு சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் அதன் பின்னர் அவர் தனது பணியை சரியாகச் செய்து வந்தார்.

இந்த நிலையில் நாளையுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரப்பா மீதான புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் என்பவர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

இன்னும் 15 நாட்களில் இந்த வழக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நாளையுடன் ஓய்வு பெற்றாலும் அவர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.