சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா!: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க

டி.வி.எஸ். சோமு பக்கம்:

றைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து, “பிரண்ட்லைன்” ஆங்கில ஏடு வெளியிட்டுள்ள சிறப்பிதழ் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை ஈஎம்எஸ் நம்பூதிரிப்பாட், ஜோதிபாசு, பிடல் காஸ்ட்ரோ ஆகிய மூவருக்கு மட்டுமே பிரண்ட்லைன், சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. தற்போது நான்காவதாக கருணாநிதிக்கு வெளியிட்டிருக்கிறது.

சிறப்பான ஆக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. இதழ் வெளியான மறுவாரமே மறுபதிப்பு கண்டிருப்பதில் இருந்தே இதற்கான வரவேற்பை புரிந்துகொள்ளலாம்.

இந்த இதழில் தவறான வரலாற்றுத் தகவல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா தனது கட்டுரையில்,”கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமூக நீதி தொடர்பான பல சட்டங்களை இயற்றினார். அவற்றில் குறிப்பிடத்தக்கது சுயமரியாதைத் திருமணமாகும். அவ்வகையான திருமணத்திற்கு சட்டரீதியான உரிமையை அவர் அளித்தார். இப்போதும்கூட மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான இணையர்கள் இம்முறையில் திருமணம் செய்கின்றனர். இவ்வகையான திருமணங்களை நடத்துவதில் இந்தியாவில் தமிழகமே முன்மாதிரி என்று கூறலாம்” என்று சங்கரய்யா குறிப்பிட்டிருக்கிறார்.

(“As Chief Minister, Kalaignar enacted many laws relating to social justice, and among them the one on self-respect marriage was significant. He gave legal sanctity to such a marriage. Today, a large number of couples are opting for it in the State. I believe that Tamil Nadu has been the torchbearer in the country in hosting such marriages.)

ஆனால் இது தவறான தகவல். சுயமரியாதை திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரத்தைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் அண்ணாதான். கருணாநிதி அல்ல.

இது குறித்து விரிவாகவே பார்ப்போம்.

முன்பெல்லாம் திருமணம் எப்படி நடந்தது என்பது நமக்குத் தெரியும். “திருமணம் ஆகும் முன் என் கணவரின்/ மனைவியின் முகத்தை நான் பார்த்ததே இல்லை” என்று வயது மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

சொந்த சாதிக்குள் நடக்கும் திருமணத்திலேயே இதுதான் நிலை.

இந்த சூழ்நிலையில்தான் தந்தை பெரியாரின் தொடர் பிரச்சாரம், சமூகப்போராட்டம் காரணமாக சாதி மறுப்பு திருமணங்கள், விதவைத்திருமணங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

அண்ணா – பெரியார்

1928-ம் வருடம் அருப்புக்கோட்டையில் உள்ள சுக்கிலாநத்தம் என்ற சிற்றூரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையர்களுக்கு,   சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்தார். இதுதான் முதல்  சுயமரியாதைத் திருமணம்.

இது உறவுக்குள் நடந்த திருமணம் என்றாலும், புரோகிதர் இல்லாம் நடந்த திருமணம்.

தவிர சாதி கடந்த திருணங்கள் பலவற்றையும் பெரியார் நடத்திவைத்தார். இதற்கு சனாதனவாதிகள், “இதெல்லாம் தெய்வகுற்றம்” என்று கூச்சலிட்டனர்.

இதற்கு பெரியார், “நான் என்ன மனிதனுக்கும், மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்?  மனித சாதியில் பிறந்த ஆணுக்கும், மனித சாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்?’ என்று தனது வழக்கமான பாணியில் பளிச் என பதில் அளித்தார்.

ஆனாலும் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அப்போது இல்லை.ஆகவே சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வோருக்கு பல்வேறு இன்னல்கள்!

அம்பேத்கர் – நேரு

1947-ல் அம்பேத்கர் இந்து மதச் சீர்திருத்த சட்டத்தின் முன் வரைவை நாடாளுமன்றத்தில் வாசிதார். இதில் இந்து திருமண சட்டமும் ஒன்று.

இதை அம்பேத்கர் வாசிக்கும்போதே உறுப்பினர்கள் பலருக்கு உடன்பாடில்லை என்பதை அவர்களது முகக்குறிப்பே உணர்த்தியது.

ஆனாலும் பலரது எதிர்ப்புகளை மீறி, . 1951-ல் பல இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற விவாதத்திற்கு வந்தது. பெரும்பாலானோர் எதிர்ப்பு காரணமாக  சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மனம் வெறுத்த அம்பேத்கர் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.

பிறகு ஒரு வழியாக 1955-ல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்து மதத்தில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இச்சட்டம் அளித்தது.

ஆனாலும்.. திருணம் தாலி கட்டி சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடக்க வேண்டும், , அதில் சாஸ்திரங்கள் இருத்தல் வேண்டும் என்றது.

சாதி, மதத்தை வலியுறுத்தும் சாஸ்திர, சம்பிரதாயங்களை உடைக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் லட்சியம்!

அதற்கான வடிவமகாத்தான் சுயமரியாதை திருணத்தை அவர் உருவாக்கினார்.  “புரோகிதர், தாலி உள்ளிட்ட சாஸ்திர சம்பிரதாயங்கள், தேவையில்லை.  இருமனம் இணையும் திருமணத்தை அங்கீகரிக்க சட்டம் வேண்டும்” என்பது அவரது நோக்கமாக இருந்தது.

இதை, தான் முதல்வராக பதவியேற்றவுடன் 1967ம் ஆண்டு நிறைவேற்றினார் அண்ணா. ஆமாம்..
1967-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், அண்ணாவால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நேரத்தில்  குறிப்பிட வேண்டிய நிகழ்வு ஒன்று உண்டு. மசோதா சட்டமாகும் முன், அதன் வரைவு நகலை தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டு தாலி என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்ததை கவனிதார் பெரியார்.  தாலியை கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்று வார்த்தைகளை மாற்ற ஆலோசனை வழங்கினார்.

இந்த திருத்தத்துடன்  அதனை சட்டமாக்கினார் அண்ணா.

சாதி, சாதிப்பிடிப்பு, சாதி வெறிக்கான அடி நாதம், சுயசாதி திருமண முறைதான் என்பதைக் கண்டறிந்த தந்தை பெரியார், அதை அடியோடு ஒழிக்க கண்டறிந்ததுதான் சுயமரியாதை திருணம். இதற்கு சட்டவடிவம் கொடுத்து அங்கீகாரம் அளித்தவர் அண்ணா.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் 28-11-1967.

சங்கரய்யா கட்டுரை

இதைத்தான் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்ததாக தவறுதலாக சங்கரய்யா, பிரண்ட் லைன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்

சங்கரய்யா சுதந்திரப்போராட்ட வீரர்,  பொதுவுடமை போராளி, மக்கள் சார்பைத்தவிர வேறு சார்பில்லாத மனிதர்.. ஆனால் முதுமையின் காரணமாக கவனத்தில் மறந்து  இப்படி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார். அதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் இது வரலாற்றுத்தவறு.

தவிர கருணாநிதியை ஏற்றிச் சொல்ல எத்தனையோ விசயங்கள் உண்டு. தவறான விசயத்தில் அவரை ஏற்றிச் சொல்வதாகிவிடக்கூடாது.

குறிப்பிட்ட கருணாநிதி சிறப்பிதழ் வெளியான ஒருவார காலத்துக்குள் அடுத்த பதிப்பு கண்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மகிழ்ச்சி.

அடுத்த பதிப்பில் இத்தவறை சரி செய்ய வேண்டும்.

கார்ட்டூன் கேலரி