Random image

சினிமா விமர்சனம் : அண்ணாதுரை…  பழைய மொந்தையில், பழைய கள்ளு

“என் வழி தனீஈஈ வழி“ என்கிற பன்ச்சை, அதைச் சொன்ன ரஜினி கடை பிடிக்கிறாரோ இல்லையோ, அதை ஒரு மந்திரம் போல கடைபிடித்து வருபவர் விஜய் ஆண்டனி.

தனக்கேற்றார் போல கதைகளையும் தன் வசதிக்கேற்ற இயக்குனர், நடிகை, நடிகர்கள் என அத்தனைப் பேர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு யாருடைய வம்பு தும்புக்கும் போகாமல், பெரிதாக பட்ஜெட் போட்டு அலட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து பெரிய அளவிலான தோல்விகளும் இல்லாமல் படங்களைக் கொடுத்து வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு… திடீரென என்னானதோ? யார் கண் பட்டதோ?

பொதுவாக தங்களை ஒரு ஹிட் நடிகராக தக்க வைத்துக் கொண்ட பிறகு அல்லது தாம் ஒரு பெரிய ஹீரோ என்று நம்பத் தொடங்கிய பிறகு எல்லா ஹீரோக்களுக்கும் வருகின்ற இயல்பான ஆசை விஜய் ஆண்டனிக்கும் வந்து விட்டிருக்கிறது.

டபுள் ஆக்‌ஷனில் நடிக்க வேண்டும்.

அந்த ஆசையை யாரும் குற்றம் குறை சொல்லி விட முடியாதுதான். ஆனால், அதற்கேற்றாற் போல கதைகள் அமைய வேண்டுமல்லவா? அப்படியல்லாமல், ”இப்போ ஒரு டவுள் ஆக்‌ஷன் படம் நடிக்கலாம்” என்று முடிவு செய்து விட்டு, பிறகு கதையை உருவாக்கினால்… இப்படித்தான் ஆகும்.

ஆமாம். டபுள் ஆக்‌ஷன் தான். அண்ணாதுரை. மற்றும் தம்பிதுரை.

“ஒரே மாதிரி உருவம் உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகத்தானே இருக்க வேண்டும். திரைக்கதையில் வேறென்னதான் செய்ய முடியும்” என்று இம்சை அரசன் 23ம் புலிகேசியில் ஒரு வசனம் வரும். அதேதான்.

இருவரும் இரட்டையர்கள். அண்ணன் தங்கத்தின் தங்கம். தம்பி தங்கமான ராசா. அண்ணா ஒரு லவ் ஃபெயிலியர் ஆகி “ எந்நேரமும் குடித்து விட்டு இடுகாட்டில் இறந்து போன காதலியின் கல்லறையிலேயே படுத்துக் கிடக்கிறார். தம்பி ஒரு பள்ளிக்கூடத்தில் பொறுப்பான பீ.ட்டீ வாத்தியார்.  அண்ணா ஒரு குடிகாரனாக இருந்தாலும் நல்லவனில்லையா. அதனால் தனது நண்பனான காளி வெங்கட்டுக்கு முன் ஜாமின் கையெழுத்துப் போட்டு வட்டிக்குத் துட்டு வாங்கித் தருகிறார். அதுவும் வெற்றுப் பத்திரத்தில். வட்டிக்கு துட்டு கொடுத்த அந்த கந்து வட்டிக்காரன் எப்பேர்ப்பட்டவன் என்றால்…  ( அன்புச் செழியன் நல்லவர். வல்லவர். தங்கமான தங்கமானவர். கோல்டு..டைமண்டு. )

சொன்ன தேதியில் வட்டியைக் கொடுக்கவில்லையெனில் அதை ’அன்பாகப்’ பேசி வசூலிக்க தன் ஆபிஸில் வேலை செய்பவர்களை அனுப்பி வைப்பார் (அடியாட்கள் அல்ல)  வாங்கிய  கடனைத் திருப்பித் தர கையாலாத காளி வெங்கட்டை தன் அலுவலக ஆபிஸர்ஸ் மூலம் ’செல்லமாக’ கவனிக்கிறார் அன்பு… ஸாரி அந்த கந்து வட்டி. அதனால் கோபமடையும்  அண்ணா தன் நண்பனுக்கு உதவ, தம்பியின் வருங்கால மாமனாரிடம் போய்,  தம்பியைப் போல் நடித்து, பணம் வாங்கி வந்து நண்பனின் கடனை அடைக்கிறார்.

இதனால் குடும்பத்தில் சில சிக்கல்கள் உருவாகி அண்ணா வீட்டை விட்டு வெளியேறுகிறார். ( ஏற்கனவே அவர் இடுகாட்டில் தங்கி தூங்கி எழுபவர்தானே என்று கேட்கக் கூடாது,) அப்புறம் ஒரு டாஸ்மாக் காட்சியில் தன்னையறியாமல் தற்செயலாக ஒரு கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார் அண்ணா. அடுத்த காட்சியிலேயே திரும்பியும் வருகிறார். வரும் வழியில் ஒருவனை நடு ரோட்டில் வைத்து யாரோ சிலர் போட்டுத்தள்ளுகிறார்கள். போட்டுத் தள்ளுவது யாரென பார்த்தால்… அட, தம்பிதுரை.

இடைவேளை.

பொறுப்பான பீ.ட்டீ மாஸ்டராக இருந்த தம்பி ஏன் ஒரு ரவுடியாக மாறினான் என்கிற விளக்கத்தை இடைவேளைக்குப் பிறகு சொல்கிறார்கள். அண்ணா வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கந்து வட்டிக்கு கடன் வாங்கித் தந்தாரில்லையா. எல்லா பிரச்சினையும் அந்த கந்து வட்டியில்தான் ஆரம்பமாகிறது. அண்ணா ஜெயிலுக்குப் போன பிறகு, அந்த வெற்றுப்பத்திரத்தை வைத்து அண்ணாவின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார் அந்த கந்து வட்டி.

எவ்வளவு கொடுமைக்கார கந்து வட்டிக்காரனாக இருந்தாலும் அவனும் ஒரு ’பச்சைத் தமிழன்’தானே ஒழிய மலையாளி, மார்வாடி இல்லையே என்றெல்லாம் நினைக்காமல்,, அவனுடைய கை காலை முறித்து போடுகிறார் தம்பி. அதன் விளைவாகவே அவர் ஒரு ரவுடியாக மாறக் கூடிய காலக் கொடுமைக்கு ஸாரி.. காலச் சூழலுக்கு ஆளாகிறார். கடைசியில் தம்பியை என்கவுண்ட்டர் செய்ய போலிஸ் அலைய, ஏற்கனவே நல்லவனாக இருக்கும் அண்ணா தன் குடும்பத்தினரைக் காக்க தியாகத் திருவிளக்காகிறார்.

படம் முடிந்தது.

’நல்லவர் அன்புச் செழியன்’ குறித்து முக்கால் வாசி திரையுலகினர் நல்லவர் நல்லவர் என்று சொல்கிறார்கள். அப்படி நன்னடத்தைச் சான்றிதழ் தந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். அவரே இப்படி ஒரு கந்து வட்டிக் கொடுமை கதையில் நடித்திருப்பதில் ஊமைக் குத்து ஏதும் இல்லையென நம்புவதும் நம்பாததும் இந்த படத்தின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல.

’முதல்வன்’ படம் ரிலீசானதும் இயக்குனர் ஷங்கர் அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நிதி கொடுத்தது நினைவிலிருக்கிறது. அதாவது படத்தில் வரும் முதல்வர் ரகுவரன் கற்பனைப் பாத்திரம், அது யாரையும் குறிப்பிடவில்லை. சும்மா லுலுலாயி என்பதற்காக.

அன்புவிடம் அஜித் அடி வாங்கியதாகச் சொல்லப்பட்ட பிறகுதான் ’பில்லா’வில் ’மனிதருக்குள் இருக்கும் மிருகம்’ என பன்ச் பேசுகிறார்.

கோபுரம் பிலிம்சில் ’மருது’ என்றொரு படம் நடித்த விஷால் தான் இப்போது, ‘அன்புச் செழியன் தண்டிக்கப்பட வேண்டும்’ என்கிறார்.

தங்கள் இயலாமையைத் திரையில் சொல்லிப் புலம்புகிறார்கள் போல. பாவம்.

ஆனால் அண்ணாதுரையில் வரும் விஜய் ஆண்டனிகள் அன்புச் செழியனை விடவும் இருபத்தாறு மடங்கு நல்லவன்களாக இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி, தன்னை எப்போதும் வம்புச் சண்டக்குப் போகாத, அதிர்ந்து பேசாத அமைதியான ஆனால் பவர்ஃபுல்லான மாஸ் ஹீரோவாகக் காட்ட நினைக்கிறார். தப்பில்லை. அத்ற்காக எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முக பாவனை மற்றும் வசன உச்சரிப்புகள் என்பது அலுப்பூட்டுகிறது. இரட்டை வேடங்களில நடிக்கும் படத்தில் கூட கொஞ்சூண்டு வித்தியாசமான நடிப்பைத்  தர மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அவரென்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்வார்?

போகட்டும். ’அண்ணாதுரை’யில் கதாநாயகிகள் பற்றியெல்லாம் எதுவுமே சொல்லலையே என்று ’திக்’கென ஆக வேண்டாம். டபுள் ஹீரோக்கள் இருப்பதால் இரண்டு ஹீரோயின்கள்… இல்லையில்லை.. மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். செத்துப் போன அந்த பழைய காதலியை வெறும் வசனத்திலேயே கடந்து போய் விடுகிறார்கள். அவரையும் சேர்த்து காட்டியிருந்தால் நான்காகியிருக்கும்.

அப்புறம் இந்த படத்தில் வேறு  யாரைக் குறிப்பிடுவது? இயக்குனரையா? இயக்குனர்கள் தானாக யோசித்து, தானாக நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் காலமெல்லாம் தமிழ் சினிமாவில் வழக்கொழிந்து போய் விட்டது. துணிந்து சொல்லலாம். நடிகர்கள்தான் கதைகளையும் இயக்குனர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதுவும் ஒரு சில நடிகர்கள் தன் கண்ணசைவிற்கேற்ற ஒரு ஸ்பாட் ஒர்க் ஆசாமிதான் இயக்குனர் என்கிற முடிவோடு இருக்கிறார்கள். அந்த மாதிரியான  ’கமல் ஹாச சட்டத்தை’ கறாராகக் அமல்படுத்தி வருபவர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அவருடைய படத்தில் இயக்குனர் பற்றி என்ன சொல்வது. சீனிவாசனோ என்னவோ.

இயக்குனரிடமிருந்து கதையைக் கைப்பற்றி அதைத் தனக்கேற்றாற் போல அடித்து நொருக்கினாலும் ’எமன்’, ’சைத்தான்’ படங்களெல்லாம் சற்று சுமாராகவே இருந்தன. திடீரென என்னாகி விட்டதோ வி.ஆண்டனிக்கு. எடிட்டிங்கெல்லாம் அவரே செய்திருந்தும் கூட படம் தொலைக்காட்சித் தொடரைப் போல நகர்கிறது. தில்ராஜின் ஒளிப்பதிவும் அதே ரகம்.

சண்டைக் காட்சிகள் மட்டும் பயங்கர ஆக்ரோஷமாக இருக்கிறது. அத்ற்காக எல்லொரையும் அலேக்காகத் தூக்கி கடாசுவதெல்லாம் விஜய் ஆண்டனியின் மாஸ் ஹீரோ வெறித்தனம்.

புராதன காலத்து டபுள் ஆக்‌ஷன் கதையில் முடிந்த வரையில் புதிதாக சுவாரசியமாக எதையாவது சொல்ல முடியுமா என யோசிக்காமல் மொத்த காட்சிகளையுமே சலிப்பூட்டும்படி அரதப்பழசாக எழுதி இருக்கிறார்கள்.

அதுவும் அந்த தொடக்க காட்சி இருக்கிறதே? ப்பா…. என்னா ஒரு புதிய கற்பனை. ரவுடிகள் ஒரு ’கன்னி’ப் பெண்ணைத் துரத்துகிறார்கள். கன்னிப் பெண்னைத் துரத்தி பலாத்காரப்படுத்தும் காட்சிகள் எல்லாம் பழைய சத்யராஜ் ரகுவரன் ஆனந்தராஜ் காலத்திலேயே முடிந்து விட்டதே.. இது ஏதோ பென் ட்ரைவ் அல்லது வேறு எதற்கோவாக இருக்கும் என நினைத்தால்…ஒஎம்ஜி….. பலாத்காரப்படுத்தத்தான்..

அதுவும் எதற்கு?

சரியான நேரத்தில் ஹீரோ அறிமுகம் ஆகி காப்பாற்றுவதற்குத்தான். வாட் எ ஹீரோ அறிமுகம் என வியந்து போவதற்குள் இன்னொரு புத்தம் புது காட்சி. அந்த ரவுடிப் பசங்கள் அந்த பெண்ணின் சேலைய உருவி விட்டார்கள் இல்லையா. அந்த பெண்ணின் மானம் போய் விடும் இல்லையா. அதனால்…தன் இரு கைகளையும் மார்பில் போர்த்தி மானத்தை மறைத்தபடியிருக்கும் அந்த பெண்ணுக்கு தன் சொக்காயைக் கழட்டிக் கொடுத்து மானம் காக்கிறார் ஹீரோ. (ஹீரோ சொக்காயைக் கழட்டித் தர வேண்டும் என்பதற்காகவே ஓடும் பொது அந்த பெண்ணின் சேலையையும் தூக்கிக் கொண்டு ஓடி விடுகிறான் ஒரு ரவுடித் தம்பி)

செத்துப் போன பழைய காதலியின் பெயரைக் கையில் பச்சைக் குத்திக் கொண்டு, அவளையே நினைத்துக் கொண்டு குடிகாரனாகத் திரியும் ஒரு பாத்திரத்தை இந்த 2017 ல் யோசித்து எழுதியிருக்கிறார்கள். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று ஒரு பாட்டையும் பாடியிருந்தால் அந்த பாத்திரம் முழுமையடைந்திருக்கும்.

தன்னுடைய படங்களுக்குத் தானே இசையும் அமைத்துக் கொள்ளும் விஜய் ஆண்டனி குறைந்த பட்சம் தியேட்டரிலாவது கேட்கக் கூடிய பாடல்களைத் தந்து விடுவது சற்று ஆறுதல்.. பாடல்களில் ’பிச்சைக்காரனின்’ சாயல் இருக்கிறது.

ஒரு பாடல் இப்படி தொடங்குகிறது. “ ஈஎம்ஐ போல நீயும் என்னை வெச்சி செய்யுறே… “

ஆனால், சென்ஸாருக்கு முன்பு அது  வேறு மாதிரி இருந்திருக்கிறது

”ஜிஎஸ்டி யைப் போல நீயும் வெச்சி செய்யுறே…”

ஒரு வேளை சென்ஸாரில் அந்த ’ஜிஎஸ்டி’ யைக் கட் பண்ணாமல் இருந்திருந்தால் எதோ பாஜக காரர்களால் கொஞ்சம் பேர் படம் குறித்து பேசியிருக்கக் கூடும். அதற்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

–    அதீதன் திருவாசகம்

You may have missed