சென்னை:

குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி க்குஉதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை நேற்று யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் எளிய பொருளாதாரம் கொண்ட வீடுகளைச் சேர்ந்த பலரும் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களுக்கான வாழ்த்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி அனைத்துத் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ராணி வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளுப்பேத்தியும், அவரின் மகன் திரு.பரிமளம் அவர்களின் பேத்தியுமான தங்கை இராணி குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. அதிகாரமிக்கப் பணிகளில் அமர்ந்தாலும் அண்ணா வழியில் சமூக மேன்மையை மனதில் நிறுத்திச் சிறக்க தங்கைக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.