சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் ‘அந்நியன்’ படத்தை நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், பென் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் நேற்று (14.04.2021) இயக்குநர் சங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ”‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ஷங்கர் முறையான அனுமதி பெறவில்லை. ‘அந்நியன்’ படத்திற்காக சுஜாதா எழுதிய கதையை பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ளேன். கதை உரிமம் என்னிடம் உள்ள நிலையில், எனது அனுமதியின்றி ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதம்” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் தயாரிக்கும் பென் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரவிச்சந்திரனின் நோட்டீஸிற்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

கதை, திரைக்கதை, இயக்கம்: ஷங்கர் என்று குறிப்பிட்டுத்தான் படம் வெளியானது. நான் கதை, திரைக்கதை உரிமையை எழுத்து மூலமாக நான் யாருக்கும் வழங்கவில்லை. அதை என் விருப்பப்படி பயன்படுத்துவதற்காக என்னிடமே வைத்துக்கொண்டேன். என்னுடைய உரிமையில் எந்தச் சூழலிலும் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பொறுத்தவரை, அவர் படத்திற்கு வசனம் எழுதுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டார். அதன்படியே திரையிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. அவர் கதையிலோ, திரைக்கதையிலோ, பாத்திரப்படைப்பிலோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை.

கதை என் வசமே இருப்பதால் நான் விரும்பியபடி அதை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். உண்மையைச் சொன்னால் உங்கள் நிறுவனத்திற்குத்தான் அந்நியன் படத்தின் மீது எவ்வித ரீ – மேக் உரிமையும் கிடையாது. அப்படி எதையும் நான் எழுத்து மூலம் அளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது கதை உரிமை உங்களிடம் இருப்பதாக நீங்கள் சொல்ல முடியாது.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் நீங்கள் நிறைய லாபம் அடைந்தீர்கள். ஆனால், தேவையில்லாமல் என் எதிர்கால முயற்சிகளின் மீது உரிமை கொண்டாடாதீர்கள்” என்று ரவிச்சந்திரனுக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.