புதுடெல்லி:

வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 2 கோடி கையெழுத்து பெற உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள 2 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். பிறகு, நாடுதழுவிய போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்படும். மாநில காங்கிரஸ் தலைவர்களும், மூத்த தலைவர்களும் தங்கள் மாநிலங்களில் கண்டன பேரணி நடத்துவார்கள்.

அதன் முடிவில், அந்தந்த மாநில கவர்னர்களிடம் கோரிக்கை மனு அளிப்பார்கள்.

மசோதா எதிர்ப்பு விவகாரத்தில், அகாலிதளம் இரட்டை வேடம் போடுகிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் அக்கட்சி விலகவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம். விவசாயிகள் மற்றும் ஏழைகளிடம் இருந்து 2 கோடி கையெழுத்துகள் பெறுவோம். பின்னர், ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.