தமிழக விமான நிலையங்களில் விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை! அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் உள்ள  நிலையங்களில் விமானம் தொடர்பான  அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மேலும் தூத்துக்குடி, சேலத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில், விமான நிலையங்களில், விமானம் புறப்படுவது மற்றும் வந்து சேர்வது தொடர்பான அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே அறிவிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுவதில்லை. இதனால், மற்ற மொழிகள் தெரியாத தமிழர்கள், விமான நிலைய அறிவிப்பு காரணமாக பெரும் சங்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து,  சில விமானநிலையங்களில், தமிழில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானங்களில் பயணம் செய்யும் தமிழ்மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்,  விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மத்திய விமான போக்கவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்கை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ள பாண்டியரான்,   ‘விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட பல்வேறு நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். அலுவல் மொழி சட்டத்தில் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார். மேலும்,  உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிடுவதற்கான தடை விரைவில் அகற்றப்படும்’ என தெரிவித்தார்.