31ம் தேதி அறிவிப்பு: இந்த நாலு நாள்ல ரஜினி யோசிக்கப்போறது இதைத்தான்!

ரைமிங்கா வச்ச தலைப்புதான். ஆனா விசயம், சீரியஸ்.

அரசியல் பிரவேசம் குறித்து வர்ற 31ம் தேதி சொல்றதா ரஜினி சொல்லியிருக்காரு.

“1996லேருந்தே தான் அரசியல்ல இருக்கேன்னு சொல்றவரு ரஜினி. இத்தனை வருசம் அரசியல்ல இருக்கிறவரு.. நேரடி அரசியலுக்கு வருவேனா மாட்டேனான்னு யோசிச்சிருக்க மாட்டாரா..? இன்னும் நாலு நாள் என்னத்த யோசிக்கப்போறாரோ..” அப்படின்னு ஆளாளுக்கு கிண்டல் பண்றாங்க.

எனக்கென்னவோ, ஏற்கெனவே தான் கொடுத்த வாய்ஸ்கள் பத்தி யோசிப்பாருன்னு தோணுது.

முதல்ல 1996ம் ஆண்டு ரஜினி கொடுத்த வாய்ஸ் பத்தி பார்ப்போம்.

1991-96- காலகட்டத்துல முதல்வரா இருந்த ஜெயலலிதா ஆட்சி… ஊழல், அராஜகம், நிர்வாகக் குழறுபடி.. இது எல்லாத்துக்குமே ரொம்ப பேமஸ்.

குறிப்பா உலகமே வியக்குற வகையில பிரம்மாண்டமா நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், மக்களை ரொம்பவே முகம் சுழிக்க வச்சுது.

அந்த காலகட்சத்துல ரஜினிக்கும் அந்த ஆட்சி மேல கோபம் இருந்துச்சு.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீடும், ரஜினி வீடும் போயஸ் கார்டன் பகுதியிலதான் இருக்குது. அப்பல்லாம் ஜெயலலிதா கும்மிடிப்பூண்டி வர்றாங்கன்னா.. குடவாசல் வரைக்கும் போக்குவரத்தை தடை பண்ணிருவாங்க.

அப்புறம் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர்றாங்கன்னா, அந்தப் பகுதியில போக்குவரத்தை நிறுத்த மாட்டாங்களா.. அப்படி மணிக்கணக்கான போக்குவரத்து தடை செஞ்ச நேரத்துல ஒரு முறை ரஜினியும் வீட்டுக்குப் போக முடியாம தவிச்சாரு.. ரொம்ப நேரம் காருக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து வெறுத்துப்போனவரு, காரை விட்டு இறங்கி நடந்துபோக முயற்சிக்க.. அதையும் போலீஸ்காரங்க தடுத்துட்டாங்க.

இந்த சம்பவத்தால ஜெயலலிதா மேல கடும் வெறுப்புல இருந்தாரு ரஜினி.

அந்த காலகட்டத்துலதான் திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் வீட்டுல யாரோ குண்டு வீசிட்டாங்க.

அப்பத்தான்  ரஜினி நடிச்ச பாட்சா படத்தோடு விழா சென்னையில நடந்தது. அந்த விழாவுல, “தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு” அப்படின்னு அதிரடியா பேசிட்டாரு.

பாட்சா படத்தை தயாரிச்ச… அப்போ ஜெயலலிதா அமைச்சரவையில இருந்த ஆர்.எம்.வீரப்பன்… அதே மேடையில இருந்தாரு.

அமைச்சரு எதுக்கவே ரஜினி பொட்டுனு பேசிட்டாரேன்னு பரபரப்பாயிருச்சு.

1996ம் வருசம் சட்டசபை தேர்தல் வந்துச்சு. ஒட்டுமொத்த தமிழக மக்களே ஜெயலலிதா மேல ஆத்திரத்துல இருந்த நேரம். இங்கத்திய நிலவரத்தை உணராம காங்கிரஸ் மேலிடம், அதிமுகவோட கூட்டு வச்சுக்க தீர்மானிச்சுச்சு.

இது புடிக்காம அந்த கட்சிலேருந்து மூப்பனார், ப.சிதம்பரம் விலகினாங்க. த.மா.கா.னு தனி கட்சி அமைச்சாங்க. அந்த கட்சியும் திமுகவும் கூட்டணி வச்சுது.

அந்த கூட்டணிய ஆதரிச்சு ரஜினி முதன் முறையா வாய்ஸ் கொடுத்தாரு. “மறுபடி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது”ன்னு சொன்னாரு.

அந்தத் தேர்தல்ல திமுக – தமாகா கூட்டணி அமோகமா ஜெயிச்சுது.

ஜெயலலிதாவோட ஆட்சி மேல இருந்த ஆத்திரம்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.. ரஜினி வாய்ஸ் கொடுக்காம இருந்தாலும் ஜெயலலிதா தோத்திருப்பாங்க அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் சொன்னாங்க.

ஆனால ரஜினி ரசிகர்களும், சில பத்திரிகைகளும் “அதெல்லாம் இல்லே.. ரஜினி சொன்னதாலதான் ஒட்டுமொத்த மக்களும் ஜெயலலிதாவை எதுத்து ஓட்டுப்போட்டாங்க”னு எழுதினாங்க.

இந்த நெலையில 1998-ம் வருசம் பாராளுமன்ற தேர்தல் வந்துச்சு. இப்பத்தான் ரஜினி ரெண்டாவது வாய்ஸ் கொடுத்தாரு. அதாவது தி.மு.க.  – த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்தார்.

அவரது வாய்ஸை மக்கள் புறக்கணிச்சுட்டாங்க. எதிரணியில இருந்த அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

அப்புறம்  1999 நாடாளுமன்றத் தேர்தல்…  2001 சட்டசபைத் தேர்தல்… ரெண்டுத்திலயும் வாய்ஸ் கொடுக்காம ஒதுங்கிட்டார்.

மறுபடி 2004 நாடாளுமன்ற தேர்தலில்ல திருவாய் மலர்ந்தார்.

அதுக்கும் ஒரு காரணம் இருந்தது.

தேர்தலுக்கு முன்னால ரஜினியோ பாபா படம் வெளியாச்சு. அதில படம் முழுக்க சுருட்டு குடிக்கிற மாதிரி வருவாரு ரஜினி.

“திரைப்படத்துல.. அதுவும் நாயகன் புகை மது குடிக்கிற மாதிரி வர்றது இளைஞர்கள் மனசுல விசத்தை விதைக்குது”ன்னு ரொம்ப நாளாவே பாமக எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்துச்சு. அந்த கட்சியோடு நிறுவனத்தலைவரு ராமதாசு, பல முறை ரஜினியை நேரடியாக கண்டிச்சு அறிக்கை விட்டிருக்கிறாரு.

அப்படியும் பாபாவுல புகை காட்சி இருக்கவும்.. ராமதாசு ஆத்திரமாயிட்டாரு.

பாபா படம் வெளியாகுற தியேட்டர்கள்.. வட மாவட்டத்துல.. தாக்கப்பட்டுச்சு. மீறி படத்தை வெளியிட முயன்ற ஒரு ஊர்ல.. பாபா படப்பெட்டியை தூக்கிட்டு பாமக ஆட்கள் எஸ்கேப் ஆயிட்டாங்க.

வட மாவட்டத்துல பாபா  படத்தை திரையிட முடியாத நிலை. அப்புறம் ஏதோ சமாதான பேச்சு நடத்தி, படம் ரிலீஸ் ஆச்சு. பெரும் தோல்வி.

இது ரஜினி மனசுல பெரும் காயத்த ஏற்படுத்துச்சு.

இந்த ஆத்திரத்தை 2004 தேர்தல்ல வெளிப்படுத்தினாரு.

வித்தியாசமான ஒரு வாய்ஸ் கொடுத்தாரு.

அதாதவு “மத்த தொகுதிங்க பத்தி கவலை இல்லே.. பா.ம.க. போட்டியிடுற 6 தொகுதிகள்ல அதைத் தோக்கடிக்கணும்”னு பேசினாரு. “ராமதாசு ஒரு ராட்சசன்” அப்படின்னு கடுமையா தாக்கினாரு.

பட்.. இந்த முறையும் ரஜினி வாய்ஸை மக்கள் நிராகரிச்சுட்டாங்க. பாமக அமோக வெற்றி பெற்றது.

ஆக 1996க்கு அப்புறம் ரெண்டு முறையும் ரஜினி வாய்சை மக்கள் புறக்கணிச்சிருக்காங்க.

தவிர 1996ம் வருசத்தைவிட இப்போ அரசியல் சூழல் ரொம்பவே மாறியிருக்கு.

இந்த நெலையிலதான்  டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறதா ரஜினி சொல்லியருக்கிறாரு.. அதாவது அரசியலுக்கு வர்றேனா இல்லையாங்கிறத சொல்வாராம்.

இதையெல்லாம்தான் இந்த நாலு நாள்ல ரஜினி யோஜிப்பாருன்னு தோணுது!