Random image

ரூ.1கோடியை தாண்டிய கர்நாடக எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம்:! காரணம் தெரியுமா?

டில்லி:

நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என்றும்,   இதில், கர்நாடக மாநில எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1 கோடியை தாண்டி யுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடீஸ்வர எம்எல்ஏக்கள் உள்ள கர்நாடக சட்டமன்ற பேரவை

நாடு முழுவதும் உள்ள  எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் தொடர்பாக `அசோசி யேசன் ஃபார் டெமாகிரடிக் ரிஃபார்ம்ஸ்’ மற்றும் `நேஷனல் எலக்‌ஷன் வாட்ச்’ அமைப்புகள் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியல்  தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு விவரப்படி, இந்தியாவில் பணக்கார எம்எல்ஏக்கள் உள்ள மாநிலமாக கர்நாடக மாநிலம் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த மாநில எம்எல்ஏக்கள் 203 பேரும் ஆண்டு வருமானம் 1 கோடியை தாண்டி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மக்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள  224 எம்எல்ஏக்களில் 203 பேர் சராசரியாக ஆண்டுக்கு ரூ.111.4 லட்சம் (ரூ.1கோடியே 11 லட்சம்) வருவாயுடன் முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

இது எப்படி சாத்தியம்? அவர்களுக்கு எவ்வாறு இவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமயத்தில், அனைத்துக் கட்சிகளும், தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக மாநிலத்தின் பிரபலமான தொழிலதிபர்கள், கல்வி அதிபர்கள் போன்ற பெரும் பணக்காரர்களையே  களமிறக்கி வெற்றி பெற்றதாக கூறப்படு கிறது.   அதன் காரணமாகவே அவர்களது வருமானம் கோடிக்கணக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று தேர்வான 222 சட்டமன்ற உறுப்பினர்களில், 65 எம்எல்ஏக்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்றும், 30 பேர் சுரங்கம் மற்றும் கிரானைட் தொழிலில் கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதிப்பவர்கள், பலர் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால்தான் கர்நாடக மாநில எம்எல்ஏக்களின் ஆண்டு வருவாய் மற்ற மாநில எம்எல்ஏக்களின் ஆண்டு வருவாயை விட பல மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் பண பலம் முக்கியம் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அவர்களுக்கு தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இடங்களை ஒதுக்கி பணத்தை தண்ணீராக செலவழித்து வெற்றி பெற்றிருப்பதும்  சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.