விஜயவாடா

போயிங் 777 விமானத்தை இயக்கிய முதல் இளம் பெண் கமாண்டர் என்ற சாதனையை அனி திவ்யா என்னும் பெண் படைத்துள்ளார்.

பதான்கோட்டில் பிறந்தவர் அனி திவ்யா (வயது 30).   இவர் சிறு வயது முதலே ஆந்திராவில் உள்ள விஜயவாடா நகரில் வசித்து வருகிறார்,   இவர் தெலுங்கு மீடியத்தில் படித்தவர்.  ஆங்கிலத்தில் சரிவர உரையாட தெரியாதவர்.   இப்போது போயிங் 777 விமானத்தை இயக்கிய முதல் இளம் பெண் கமாண்டர் என்னும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

” நான் எனது கடின முயற்சியின் மூலமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன்.   இதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர், ஆசிரியர்கள், ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   அவர்களால் தான் இந்த சாதனை என்னால் நிகழ்த்த முடிந்தது.

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்.  எனக்கு பைலட் பயிற்சி பெற போதுமான பணவசதி இல்லாத போதும், என் பெற்றோர் அரும்பாடு பட்டு என்னை பயிற்சி பெற வைத்தனர்.   அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை என்னால் அவ்வளவு எளிதாக ஈடு கட்ட முடியாது.  நான் படித்தது, பேசிப் பழகியது எல்லாமே தெலுங்கு மொழியில் தான்

விஜயவாடா ஒரு சிறு நகரம்,  இங்கு பலரும் ஆங்கிலம் பேசுவது கிடையாது.  எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன்.  இதிலிருந்து வெளிவர என் பயிற்சி மையம் மிகவும் உதவியது.   அங்கு தான் ஆங்கிலம், மற்றும் சிறந்த விமானியாக தேவையான பல தகுதிகள் ஆகியவற்றை கற்றேன்.

எனது வாழ்நாள் கனவு இப்போது தான் நிறைவேறியது”

இவ்வாறு அனி திவ்யா கூறினார்.