ஈரானில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 2வது கட்டமாக 275 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர்…

டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளிடையே விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ஈரானில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று  இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் ராஜஸ்தானில் உள்ள முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட  நிலையில், ஈரானில் பணியாற்றி வந்த சுமார் 600 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

அவர்கள் தங்களை மீட்டு, அழைத்துச்செல்ல இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து முதல்கட்டமாக கடந்த வாரம் 277 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்டமாக 275 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டநிலையில், அங்கு விமான நிலையத்தில் முதல்கட்ட பரிசோதனைக்குப் பிறகு அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.