ராஜஸ்தானில் இஸ்லாமிய வாலிபரை அடித்து கொன்ற பசு பாதுகாப்பு கும்பல்….3 பேர் கைது

ஜெய்ப்பூர்:

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டு இறைச்சி வைத்திருக்கும் சந்கேகத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரில் இதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

 

 

ஹரியானா மாநிலம் கலோகான் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பர் அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் லாலாவாண்டி காட்டுப் பகுதி வழியாக நேற்று முன் தினம் இரவு ஓட்டிச் சென்றார். அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் சிலர் இருவரையும் வழி மறித்து தாக்கினர்.

அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர் கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அக்பர் கான் ராம்கார் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ராம்கார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்துக்கு முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பசு பாதுகாவலர்கள் சிலர் கூறுகையில்,‘‘ அக்பர் கானை நாங்கள் அடித்துக் கொல்லவில்லை. அவர் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது தான் இறந்தார்’’ என்று தெரிவித்துள்ளனர்.