“சர்கார்” படத்துக்கு இன்னொரு சிக்கல்!

ர்கார் படத்துக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும்  சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கதை தன்னுடையது என்று ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே  விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி கடந்த 2015ம் ஆண்டு வெளியான கத்தி படத்தின் மூலமாக சர்கார் படத்துக்கு  இன்னொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கத்தி படம் வெளியான போதே, அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் ஏ.ஆர். முருகதாஸ் திருடிவிட்டதாகவும்  அன்பு.ராஜசேகர் என்பவர்  புகார் தெரிவித்தார். இது குறித்து தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது

தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர், “என்னுடைய தாகபூமி என்ற குறும்படத்தைதான் கத்தி படமாக  எடுத்துவிட்டார்கள்.  அதற்கு நஷ்டஈடு தர வேண்டும்” என்றார்..

இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையத்தல் இன்று புகார் அளிக்க இருப்பதாக அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

அன்பு.ராஜசேகர்

இது குறித்து  அவரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “கத்தி பட திருட்டு குறித்து நான் தொடுத்த வழக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தல் நடந்து வருகிறது.   மூன்று முறை சம்மன் அனுப்பியும் விஜய் உள்ளிட்ட எவரும் ஆஜராகவில்லை” என்றார்.

கத்தி படம் வெளியானபோது,  மீஞ்சூர் கோபி (அறம் பட இயக்குநர்) என்பவரும் அது தனது கதை என்று வழக்கு தொடுத்தார். அந்த  விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்க்கப்பட்டது.

இதற்கு, “மீஞ்சூர் கோபியின் கதை என்ன என்பது எனக்குத்தெரியாது.  ஆனால் எனது தாகபூமி கதையைத்தான் கத்தியாக ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்தார். அவருக்கு எனது கதையை அனுப்பிய ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன” என்று பதில் அளித்த அன்பு.ராஜசேகர், “. கத்திக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கும் படம் (சர்கார்) இப்போதுதான் வெளியாகிறது. ஆகவே இந்த நேரத்தில் புகார் அளிக்க திட்டமிட்டேன். கதையைத் திருடும் ஏ.ஆர்.முருகாஸ் இயக்கும் எந்தப் படமும் வெளியாகக் கூடாது. அதற்காகத்தான் போராடுகிறேன். காவல்துறையில் புகார் அளிப்பதோடு நீதிமன்றத்தையும் நாடுவேன்” என்றார் ஆவேசமாக.