புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், மே 3ம் தேதி நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகள் மீது, விமானங்கள் மூலம் மலர் தூவப்படும் என்று அறிவித்துள்ளார் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்.
மேலும், கடற்படை கப்பல்களும் கடலில் அணிவகுப்பு நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதூரியா மற்றும் தரைப்படை தளபதி முகுந்த் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கூறியதாவது, “ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், மீடியா துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி பாதுகாப்பது என்ற அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளனர்.
கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3ம் ‍தேதி காஷ்மீர் முதல் குமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில் காவல் துறையினர் சிறப்பான பணியை மேற்கொள்கின்றனர். அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும். அங்கு ராணுவத்தைக் களமிறக்குவதற்கான தேவையில்லை. பயங்கரவாதம் அல்லது ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடவில்லை என்று கூறினர்.
கைத்தட்டுதல் மற்றும் விளக்கேற்றுதல் போன்று இதுவும் ஒரு தேவையற்ற பம்மாத்து நடவடிக்கைதான் என்றும், உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான மற்றும் போதுமான நிவாரணத்தை அளித்து, அதிக சோதனைகளை மேற்கொண்டு, சரிந்துவரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதுதான் இப்போதைய தேவை என்றும் கூறுகிறார்கள் மக்களுக்கான விமர்சகர்கள்.