“அறம்”  குறித்த இன்னொரு பார்வை

வழக்கறிஞர், சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் (Sundar Rajan  ) அவர்களது முகநூல் பதிவு:

சுந்தர்ராஜன்

“நான் கலைஞனோ, கலை ரசிகனோ அல்ல…!

குறிப்பாக திரைப்படங்களில் அவ்வளவாக ஆர்வமில்லாதவன்.

ஆனாலும் அறம் திரைப்படம் குறித்த என் கருத்துகளை பதிவு செய்கிறேன். இதன் எதிர்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதற்கு துணிந்துதான் எழுதுகிறேன்.

அறம் திரைப்படத்தின் துவக்கக் காட்சி உண்மையில் அற்புதமானது. குடிநீர் என்ற ஜீவாதார உரிமை மறுக்கப்படும் அவலத்தை உணர்த்துகிறது. அதற்கான காரணங்களையும் அம்பலப்படுத்துகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் ஆழ்துளைக் கிணறு காட்சிகள்தான் கதையின் மைய இழையாக இருக்கிறது.

ஆழ்துளைக் கிணறில் விழுந்துவிடும் சிறுமி தன்சிகாவையும், குழந்தையை மீட்கும் வேட்கையுடன் செயல்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவதனியையும் மையம் கொண்டு திரைக்கதை சுழல்கிறது.

கதையின் ஊடாக அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கதைக்களனுக்கு அருகே ராக்கெட் ஏவும் தளம் இருக்கிறது. பல காட்சிகளில் ராக்கெட் ஏவுவதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள அளவற்ற ஆர்வமும், கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு ஆயத்தமில்லாத நிலையும் ஒப்பிடப்படுகின்றன. அரசின் ராக்கெட் கொள்கை விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் மேலுள்ள ஒப்புநோக்கல் ஏற்கத்தக்கதுதானா என்ற கேள்வி எழுகிறது.

பேரிடர் மேலாண்மை குறித்து நமது தலைவர்கள் தேவையான அளவிற்கு சிந்திக்கவில்லை என்பது உண்மைதான். அணுஉலைகளைப் பற்றி பேச வேண்டாம். இந்தியா ஒரு புண்ணிய பூமி. இங்கே எதுவும் தவறாக நடக்காது என்று நம்புவோம்! ஆனால், மீண்டும் ஒரு சுனாமி வந்தால் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? போபால் விஷவாயு விபத்தைப்போல இப்போது ஒரு விபத்து ஏற்பட்டால் நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்த ஆண்டும் அளவுக்கு அதிகமான மழை பெய்து கடலூரை வெள்ளம் சூழ்ந்தால் அப்பகுதி மக்களின் நிலை என்ன? சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் ஒரு பகல் நேரத்தில் ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால் என்ன செய்யப்போகிறோம்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பலாம். இந்த கேள்விகளுக்கான பதில் ஆண்டவர்களிடமும் இல்லை. ஆள்பவர்களிடமும் இல்லை. ஆன்மாவிடம் இருக்குமா என்பது தெரியவில்லை.

நயன்தாரா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை நான் மறந்துவிடவில்லை. அக்குழந்தைகளின் இழப்போ, துயரமோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அவலம்தான். ஆனால் இந்த அவலங்களை தவிர்ப்பது அரிதான காரியமல்ல. அரசு இந்தப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுவதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமே இந்தப் பிரச்சினையை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இந்த ஆழ்குழாய் கிணறுகளின் விட்டம் அல்லது ஆரம் குறிப்பிட்ட அளவிற்குமேல் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து அதை முழுமையாக அமல்படுத்தினால் போதுமானது. இதை சரியாக கண்காணிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் மேல் துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முன் வந்தாலே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்.

இதெல்லாம் எதிர்காலத்தில் செய்வதற்கான யுக்திதானே! இதுவரை குழந்தைகள் இந்த கிணற்றில் சிக்கி உயிரிழக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. உண்மைதான். துயரம் நடந்திருக்கிறது.

ஆனால் இதற்கான தீர்வு, கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு இயந்திரம் கண்டுபிடிப்பதல்ல. அவ்வாறான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்த மணிகண்டன் என்ற இளைஞரைப்பற்றி யாருக்கும் தெரியாது என்று சமூகத்தை சாடும் இந்த “அறம்” திரைப்படத்திலும் அந்த இளைஞரை அறிமுகம் செய்யவில்லை. குறைந்தபட்சமாக அந்த இளைஞரை படத்தில் திணிக்கப்பட்ட தொலைகாட்சி விவாதத்திலாவது பங்கேற்க வைத்து அறிமுகம் செய்திருக்கலாம்.

கலெக்டர் மதிவதனி திரைப்படத்தின் டிரெய்லரில் பேசும் வசனம் படத்தில் காணவில்லை. ஆனால் அது பிரச்சினை இல்லை. ஒரு குழந்தையை மீட்க கலெக்டர் காட்டும் ஆர்வம் மெச்சத்தக்கதுதான். ஆனால் அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதரிக்கக்கூடியவை அல்ல.

பேரிடர் மேலாண்மைத்துறை நிபுணர்கள் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சற்று தொலைவில் சற்று பெரிய கிணறு தோண்ட முற்படும்போது நிலத்தில் விரிசல் ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு திரும்பி விடுகின்றனர். பிறகு ஆழ்துளைக் கிணற்றில் மற்றொரு குழந்தையை இறக்கி, ஏற்கனவே அக்கிணற்றில் சிக்கிய குழந்தை தன்சிகாவை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது அந்த ஆழ்துளைக்கிணற்றின் அருகே திரளும் மக்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சிக்கின்றனர். ஆனால் கலெக்டர் அதை தடுக்கிறார். “உங்களுக்கு மேலே உள்ளவர்களை உங்களால் தடுக்கமுடியுமா? இந்த எளிய மக்களை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். காவல்துறையினர் பின் வாங்குகிறார்கள். உடனே அப்பகுதியில் மக்கள் திரள்கின்றனர். உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப்பின் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்படுகிறது.

அறம்” படத்தில்..

சற்று யோசித்துப் பாருங்கள். ஆழ்துளைக்கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருக்கிறது. சற்று தொலைவில் பேரிடர் மேலாண்மைக் குழு தோண்டிய கிணறு காரணமாக நிலமே விரிசல் விடுகிறது. இந்த நிலையில் ஆழ்துளைக் கிணறு அருகே ஒரு கிராமத்தையே கொண்டு வந்து நிறுத்தினால் என்ன ஆகும்? மண் சரியலாம். கிணற்றுக்குள் மண் விழவும் வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் மாநாடுகளுக்கும், தேர் இழுக்கவும்தான் ஊர் சேர்ந்து வரவேண்டும். இதுபோன்ற இடர் காலங்களில் அதிக மக்கள் திரள் பிரச்சினையைதான் கொண்டு வரும். ஆனால் திரைப்படத்தில் குழந்தை மீட்கப்படுகிறது. மகிழ்ச்சி!

இந்தப் படத்தை பார்க்கும் பாமர மக்களின் மனதில் என்ன பதியும்? 12 அங்குல அகலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தோன்றுமா? கைவிட்ட கிணற்றை மூடாத நிலச் சொந்தக்காரர் மீது புகார் கொடுக்க தோன்றுமா? அந்தக் கிணற்றின் மீது ஒரு பாறாங்கல்லைப் போட்டு மூடத் தோன்றுமா? இதற்கெல்லாம் இந்தப்படம் தூண்டவில்லை. ஆனால் ஒரு குழந்தை கெடுவாய்ப்பாக கிணற்றில் விழுந்துவிட்டால் மற்றொரு குழந்தையை கிணற்றுக்குள் இறக்கி முதல் குழந்தையை மீட்கவே தோன்றும். ஒரு கலை இலக்கிய படைப்பின் நோக்கம் இதுதானா?

மாவட்ட ஆட்சித் தலைவரோ, மற்றெந்த அரசு அதிகாரியோ இயந்திரமயமாக இருக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் அந்த அதிகாரிகள் உணர்வு வயப்பட்டும் செயல்படக்கூடாது. உணர்வுத்தளத்தில் இருக்கும் – இயங்கும் பொதுமக்களை ஆற்றுப்படுத்தும் கடமையும், பொறுப்பும் அதிகாரிகளுக்கு உள்ளது.

“அறம்ட இயக்குநர் கோபி நயினார்

இன்று இருக்கும் ஆட்சி முறையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான துவக்கநிலை பணிதான் மாவட்ட ஆட்சியர் என்பது. அதைத்தாண்டி பல படிநிலைகள் உள்ளன. அங்கெல்லாம் நேர்மையான, நிர்வாகத்திறன் கொண்ட பல அதிகாரிகள் நமக்குத்தேவை. அமைப்பு முறையில் இருக்கும் குறைகளால் வெறுப்பாகி அரசியலுக்கு வருவது தீர்வு அல்ல. அவ்வாறு அரசியலுக்கு வந்தவர்கள் இதுவரை எதையும் சாதித்ததும் இல்லை. இப்போது கொம்பு சீவப்படும் அதிகாரிகளிடம் மாற்று அரசியலுக்கான – மாற்று அரசு அமைப்புக்கான திட்டங்கள் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஒருவேளை மதிவதனி முதலமைச்சர் ஆகிவிட்டாலும்கூட இந்த அரசு அதிகாரிகளையும், அரசுத்துறைகளையும் வைத்துத்தான் அவர் ஆட்சி நடத்த வேண்டும். ஒரே இரவில் மாற்றங்கள் நிகழ்ந்து விடாது.

இருக்கின்ற அரசியல் அமைப்பை விமர்சனம் செய்வது மட்டுமே மாற்று அரசியலாகி விடாது. இதற்கு மாற்றாக எதை முன்வைக்கிறோம் என்பதுதான் மாற்று அரசியல். நம் நாட்டில் பல கட்சிகள் செய்யத் தவறுவது இதைத்தான்.

அறம் திரைப்படத்தின் இயக்குனர் திரு. கோபி நயினார் உள்ளிட்ட குழுவினரும் இதை திறம்பட கையாளவில்லை எனக் கருதுகிறேன். ஆழ்துளைக் கிணறைவிட முக்கியமான அப்பகுதியின் தண்ணீர் பஞ்சமும், அப்பகுதியில் சுரண்டப்படும் தண்ணீர் வளமும் திரைப்படத்தில் உரிய முறையில் கையாளப்படவில்லை. படத்தின் மையப்புள்ளியாக அந்த அம்சம் இடம் பெற்றிருந்தால் அரசியல்ரீதியான உரையாடல்கள் மேலும் வளம் பெற்றிருக்கும்.

இயக்குனர் கோபி நயினார் மீதும் அவரது குழுவினர் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர்தம் அடுத்தப் படங்கள் இன்னும் அழுத்தமான அரசியலைப் பேசும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்தப் படங்களுக்காக காத்திருக்கிறேன்.”