சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே!: அந்தணர் கழக  தலைவர் எஸ்.ஜெயபிகாஷ்

சுவாதி கொலை செய்யப்பட்ட உடனே, , “கொலை செய்யப்பட்டது பிராமண இனப் பெண். கொன்றது பிலால் என்ற இசுலாமிய இளைஞன்” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. பிராமண சங்கங்கள் சில, “பிராமண பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று கோரி போஸ்டர்கள் ஒட்டின.

தற்போது இந்த கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், “அந்தணர் முன்னேற்ற கழக” நிறுவன தலைவர் ஜெயபிரகாஷிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

குற்றவாளி யார் என்று காவல்துறை கண்டுபிடிப்பதற்குள் ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற சிலர், பிலால் என்ற இசுலாமிய இளைஞன்தான் கொலைகாரன் என்று சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்களே.. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது முட்டாள்த்தனமானது. சுவாதி கொலை செய்யப்பட்ட அன்றே இதுபோல சிலர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதே அதை நான் கண்டித்தேன்.  அதே நேரத்தில் பிராமணப் பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. எங்கள் இன பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்தான் சுவாதி கொலை.

ராம்குமார்
ராம்குமார்

ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?

திட்டமிட்டு காதல் நாடகம் நடத்தி எங்க சமுதாய பெண்களை  திருமணம் செய்கிறார்கள் பிற சாதி இளைஞர்கள். காரணம், பிராமண பெண்கள் பி.ஈ., எம்.ஈ. என்று  பெரிய படிப்பு படித்து நல்ல வேலைக்குச் சென்று நன்றாக சம்பாதிக்கிறர்கள். ஆகவே உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் பிராமணப் பெண்களை காதல் நாடகம் செய்து வளைக்கிறார்கள். தற்போது எங்கள் இனத்தில் கிட்டதட்ட பாதி பெண்கள் காதல் என்ற பெயரில் பிற சாதியைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் எங்கச் சாதி இளைஞர்கள் பெரும்பாலானோர் 40,50 வயது ஆகியும் பெண் கிடைக்காமல் திருமணம் ஆகாமல் தவிக்கிறார்கள்.

இதுபோன்று எங்களுக்கு எதிராக நடக்கும் விசயங்களுக்குக்கூட நாங்கள் பஸ்ஸை எரிப்பதில்லை, ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்வதில்லை. இதுதான் பிற சாதியினருக்கு வாய்ப்பாக போய்விட்டது.

 

காதல் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் பிராமணப் பெண்கள் அனைருமே மிரட்டி பணியவைக்கப்பட்டுதான் செய்துகொள்கிறார்களா?

ஆமாம். வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பிராண பெண்களை காதல் நாடகம் ஆடி திருமணம் செய்கிறார்கள் பிற சாதியினர். இல்லாவிட்டால், பணம் கொடுத்தால் உன் பெண்ணை விட்டுவிடுகிறேன் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கிறார்கள். பொதுவாக பிராமண மக்கள், கோர்ட், போலீஸ் என்று போவதற்கு தயக்கம் காட்டுவார்கள். மிகுந்த கவுரவம் பார்ப்பார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு பிராமண பெண்களை அபகரிக்கிறார்கள்.  இது ஒரு இன அழிப்பு.

திருமாவளவன் போன்றவர்கள் தூண்டிவிடுவதால்தான், காதல் நாடகங்கள் நடக்கின்றன. இது போன்ற படுகொலைகளும் நடக்கின்றன்.

திருமாவளவன்
திருமாவளவன்

 

திருமாவளவனனும் சுவாதியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். இப்போதுகூட சுவாதி குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை தர வேண்டும் என்றுகோரிக்கை வைத்திருக்கிறாரே..

“பிற இன பெண்களின் கருப்பையில் தனது சாதி குழந்தை இருக்க வேண்டும்” என்று வீதியில் மேடை போட்டு முழங்கியவர்தான் திருமாவளவன். இதை இன்னும் கொச்சையாக சொன்னார். அந்த வீடியோ இப்போதும் யூ டியூபில் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்களால்தான் தலித் இளைஞர்கள் உந்தப்பட்டு, தவறான வழிக்குச் செல்கிறார்கள்.

சுவாதி கொலை, தமிழகம் முழுதும் பற்றி எரியும் பிரச்சினையாக ஆகிவிட்டது. அதனால் பல கட்சி தலைவர்கள் சுவாதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்படி வந்தவர்தான் திருமாவளவன். அதை ஒரு பெரிய விசயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

சரி, பிராமண பெண்களை காதல் நாடகம்  நடத்தி கவர்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறீர்கள். அதன் விளைவாக தாக்குதலும் கொலையும் நடப்பதாக சொல்கிறீர்கள். இதைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் என எதிர்பா்ர்க்கிறீர்கள்?

பதிவுத்திருமணம் செய்யும்போது, பெற்றோர் அனுமதியும் வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். பெண்களுக்கு தொல்லை தருபவர்கள் பற்றி புகார் கொடுத்தால், காவல்துறையினர் அதை ரகசியமாக விசாரிக்க வேண்டும். இப்படி பெண்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையத்தில்இரு காவலர்களை தனியாக நியமிக்க வேண்டும்.

  • டி.வி.எஸ். சோமு

கார்ட்டூன் கேலரி