நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வியூகம்: இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கடந்த தேர்தலின்போது அறிவித்த மோடி, பின்னர்  சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று கூறியதால், கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. அதைத்தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் வியூகம் அமைத்து வரும் நாயுடு ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று கர்நாடக மாநில முதல்வர் மற்றும் தேவகவுடாவை சந்தித்து பேசிய நிலையில், இன்று தமிழகம் வருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேச உள்ளார்.

.சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.