டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உத்தரப்பிரதேச அரசு மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை. சட்டத்தை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்த கொண்டு தான் இருக்கின்றன.

இந்  நிலையில் டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பொருள்படி ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் இடம்பெற்று இருக்கும் ஹரிஷ் மந்திர் கூறியதாவது: குடியுரிமை சட்ட விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமான பொய்களை சொல்லி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி தவறான விவரங்களை வெளியிட்டு வருகிறார். பிரதமரின் கருத்துகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவில் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், விவரங்கள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணலாம். நாட்டில் தடுப்பு மையங்கள் இல்லை என்று பிரதமர் கூறுகிறார்.

ஆனால் நான் கூறுகிறேன், தடுப்பு மையங்கள் உள்ளன. அந்த மையங்களை நான் பார்வையிட்டு இருக்கிறேன். இந்த விவகாரத்தில் அவர்கள் முதலில் வகுப்புவாத பிரச்னையாக மாற்ற முயன்றனர். பின்னர் அதிகளவு சக்தியை பயன்படுத்தி கருத்து வேறுபாட்டை நசுக்க பார்த்தனர் என்றார்.

மற்றொரு சமூக ஆர்வலர், மீரட் சம்பவத்தில் உண்மை கண்டறியும் குழுவில் இருந்து கவிதா கிருஷ்ணன் கூறி இருப்பதாவது: போலிஸ் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கைகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

கொல்லப்பட்ட 20 வயதான ரிக்ஷா தொழிலாளியை சம்பவத்தின் சூத்திரதாரி என்று முத்திரை குத்துகின்றனர்.கொல்லப்பட்ட சமயத்தில் அவர் வீட்டுக்கு அந்த வழியே சென்று கொண்டிருந்தார் என்றார்.

சுவராஜ் இந்தியா என்ற அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், அரசின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவின் கீழ் இந்த விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய சிறுபான்மை ஆணையமும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும், பங்கெடுக்க வேண்டும் என்றார்.